நெல்லையில் 2 கிலோ கஞ்சா மற்றும் ரூ.10 லட்சம் பணத்துடன் கைதான பேரூரணி சிறை வார்டன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து அவர் பணியாற்றிய சிறையில் 75-க்கும் மேற்பட்ட போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாலுகா விட்டிலாபுரம் வள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் மாரியப்பன் மகன் தமிழரசன் (31). இவர் தூத்துக்குடி பேரூரணி சிறையில் வார்டராகப் பணியாற்றி வந்தார். தமிழரசனும், முறப்பநாடு புதுக்கிராமத்தைச் சேர்ந்த வீரபாகு மகன் நவீனனும் (23) கடந்த 2 நாட்களுக்கு முன்பு நெல்லை டவுன் பகுதியில் சொகுசு காரில் வந்தபோது போலீசாரால் மறிக்கப்பட்டனர்.
காரைச் சோதனையிட்டதில் 2 கிலோ கஞ்சா, ₹10 லட்சம் ரொக்கம் ஆகியவை இருப்பது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்த நெல்லை டவுன் போலீசார், கார், கஞ்சா மற்றும் பணத்தைப் பறிமுதல் செய்தனர். விசாரணையில், சிறையில் கஞ்சா வழக்கில் அடைக்கப்பட்ட கைதிகளுடன் தமிழரசனுக்குப் பழக்கம் ஏற்பட்டு, அவர்களுடன் கூட்டு சேர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.
கஞ்சா கடத்தல் வழக்கில் சிறை வார்டர் தமிழரசன் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பாளையங்கோட்டை மத்திய சிறை கண்காணிப்பாளர் செந்தாமரைக்கண்ணன் அவரை உடனடியாகப் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். தமிழரசன் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவர் பணியாற்றிய பேரூரணி சிறையில் நேற்று அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டது.
தூத்துக்குடி புறநகர் டி.எஸ்.பி. சுதிர் தலைமையில், சிப்காட் இன்ஸ்பெக்டர் தனசேகரன், புதியம்புத்தூர் இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி மற்றும் 30 ஆயுதப்படை போலீசார், சிறை வார்டர்கள், கண்காணிப்பாளர்கள் என சுமார் 75-க்கும் மேற்பட்டோர் இச்சோதனையில் பங்கேற்றனர்.
சிறையிலுள்ள 200-க்கும் மேற்பட்ட கைதிகளின் அறைகள், சமையலறை, குடோன், கழிப்பறைகள், பதிவேடுகள் அறை மற்றும் கண்காணிப்புக் கோபுரம் உள்ளிட்ட இடங்களில் சுமார் 2 மணி நேரம் தீவிர சோதனை நடத்தப்பட்டது.
சோதனையின் முடிவில் சந்தேகத்திற்கிடமான எந்தப் போதைப்பொருட்களும் கைப்பற்றப்படவில்லை என்றாலும், இச்சம்பவம் சிறைத்துறையினர் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

