ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள கிராமத்தில் மக்கள் பயன்பாட்டிற்கான குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், அப்பகுதியில் சென்ற மின்சார விநியோக வழித்தடத்தின் ஒயர் ஒன்று எதிர்பாராதவிதமாக அறுந்து, இத் தண்ணீர் சுத்திகரிப்பு நிலையத்தின் கட்டடத்தின் மீது விழுந்துள்ளது.

மின் ஒயர் அறுந்து விழுந்தது தெரியாமல், அப்பகுதியைச் சேர்ந்த சிறுவன் பிரவீன் (6) அங்கே விளையாடச் சென்றபோது சுத்திகரிப்பு நிலையத்தைத் தொட்டுள்ளான். அப்போது அவன் மீது பலத்த மின்சாரம் பாய்ந்ததில், சிறுவன் பிரவீன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தான்.

தம்பி பிரவீன் மின்சாரம் தாக்கிச் சுருண்டு விழுந்ததைக் கண்ட அவனது அக்கா நிறைமதி (10), விபத்தின் தீவிரமறியாமல் தம்பியைத் தொட்டுக் காப்பாற்ற முயன்றுள்ளாள். அப்போது அவளது உடலிலும் மின்சாரம் பாய்ந்ததில், சிறுமி நிறைமதியும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தாள்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 வயது சிறுவனும், 10 வயது சிறுமியும் மின்சாரம் தாக்கி அடுத்தடுத்து உயிரிழந்த இச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இச் சம்பவம் குறித்துத் தகவலறிந்து வந்த காவல் துறையினரும், மின்சார வாரிய அதிகாரிகளும் நேரில் சென்று ஆய்வு செய்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.