கல்லிடைக்குறிச்சியில் நபிகள் நாயகம் பிறந்த நாள், மதரஸா ஆண்டு விழா உள்ளிட்ட முப்பெரும் விழா கோலாகலமாக நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைக்குறிச்சியில் நபிகள் நாயகம் பிறந்த தின விழா, நூருல்ஹிதாயா அரபி மதரஸாவின் 37-ஆவது ஆண்டு விழா மற்றும் மஹான் ரஹ்மத்துல்லா அப்பா தர்கா கந்தூரி விழா ஆகிய முப்பெரும் விழாக்கள் மிகச் சிறப்பாக நடைபெற்றன.

கல்லிடைக்குறிச்சி கீழத்தைகால் தெருவில் உள்ள ரஹ்மத் ஜூம்ஆ பள்ளிவாசல் வளாகத்தில் நடைபெற்ற மதரஸா ஆண்டு விழாவிற்கு ஜமாத் தலைவர் அ. நாகூர்கனி தலைமை வகித்தார். துணைத் தலைவர் எஸ்.ஏ. நாகூர்மீரான், தணிக்கையாளர் முகம்மது உசேன், பொருளாளர் என். அஜீஸ் மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர். எம். உமர் மைதீன் கிராஅத் ஓதி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார்.

சிறப்பு விருந்தினர்களாக ஓய்வுபெற்ற கல்லூரி முதல்வர் மு. அப்துல் ஹனீப், வழக்கறிஞர் எம். பாதுஷா ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றினர். தொடர்ந்து மதரஸா மாணவ, மாணவிகளின் சொற்பொழிவு, உரையாடல், கேள்வி-பதில் மற்றும் குறு நாடகம் உள்ளிட்ட பல்சுவை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

சிறப்புப் பட்டிமன்றம்:

நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, "பெற்றோருக்கு பெரிதும் பெருமை சேர்ப்பது மகனா? மகளா?" என்ற தலைப்பில் சிறப்புப் பட்டிமன்றம் நடைபெற்றது. நடுவராக நூருல்ஹிதாயா மகளிர் அரபிக் கல்லூரி முதல்வர் மு. ரஹ்மத் ரபீக் பாஜில் மன்பயீ செயல்பட்டார். மாணவர்கள் அஸ்வாக் அஹம்மது, இம்ரான், ரய்யான் புகாரி மற்றும் மாணவிகள் நாகூர் சல்மா, அஸ்மா மரியம், அஸ்மா ஆகியோர் பங்கேற்றுப் பேசினர். போட்டிகள் மற்றும் நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

கொடியேற்றம் ஊர்வலம்:

முன்னதாக, மதரஸா மாணவர்கள் மற்றும் ஜமாத் நிர்வாகிகள் பங்கேற்ற நபிகள் நாயகம் பிறந்த தின ஊர்வலம் நடைபெற்றது. வடக்குத் தைகால் தெருவில் இருந்து புறப்பட்ட இந்த ஊர்வலம் மடவிளாகம் தெரு, தெற்குத் தைகால் தெரு வழியாக விழா நடைபெறும் வளாகத்தை வந்தடைந்தது.

வியாழக்கிழமை மாலையில் தர்காவில் உலமாக்களின் குர்ஆன் ஓதும் 'ஈஸால் ஸவாப்' மஜ்லிஸ் மற்றும் இளம்பிறை கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இரவில் சிறுவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டுப் பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் ஜமாத் முன்னாள் தலைவர் என். நாகூர் மைதீன், நிர்வாகக்குழு உறுப்பினர்கள் கே.ஏ. அனிபா, எம். ஷேக் மைதீன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர். தலைமை இமாம் முகம்மது முஸம்மில் வரவேற்புரையாற்றினார். துணை இமாம் தாஜுதீன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். ஜமாத் செயலாளர் ஷேக் செய்யது அலி நன்றியுரையாற்றினார்.