வருகிற செவ்வாய்க்கிழமை (நவம்பர் 24) திருக்கார்த்திகை தீபத் திருவிழா கொண்டாடப்படுவதை முன்னிட்டு, கோவில்பட்டி நகரில் விதவிதமான அகல் மற்றும் தீப விளக்குகளின் விற்பனை தீவிரமடைந்துள்ளது.
கோவில்பட்டியில் உள்ள பூஜைப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள், அருள்மிகு செண்பகவல்லி அம்மன் கோயில் சுற்றுவட்டாரக் கடைகள் மற்றும் கோவில்பட்டி - எட்டயபுரம் சாலை சந்திப்பில் மங்கள விநாயகர் கோயில் அருகே உள்ள சாலையோரக் கடைகளில் பல்வேறு வடிவங்களிலான அகல் விளக்குகள் விற்பனைக்காகக் குவித்து வைக்கப்பட்டுள்ளன. திருக்கார்த்திகை நெருங்கி வருவதால், பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான விளக்குகளை ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர்.
விற்பனை நிலவரம் குறித்து வியாபாரிகள் கூறியதாவது: "தமிழகத்தில் விருத்தாசலம், பண்ருட்டி, கடலூர், மானாமதுரை ஆகிய பகுதிகளிலிருந்து மண்ணால் செய்யப்பட்ட பாரம்பரிய அகல் விளக்குகள் விற்பனைக்கு வந்துள்ளன. இதுதவிர, கொல்கத்தாவிலிருந்து டெரகோட்டா விளக்குகளும், டெல்லியிலிருந்து தண்ணீர் ஊற்றினால் எல்இடி போல் ஒளிரும் நவீன விளக்குகளும் அதிக அளவில் தருவிக்கப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டு வியாபாரம் அமோகமாக இருந்தது. நிகழாண்டும் விற்பனை சிறப்பாக இருக்கும் என்ற நம்பிக்கையில் விதவிதமான விளக்குகளை விற்பனைக்கு வைத்துள்ளோம். குறிப்பாக, இந்த ஆண்டின் புதிய வரவான 6 முகம் கொண்ட முருகர் விளக்குகளைப் பொதுமக்கள் மிகவும் விரும்பி வாங்கிச் செல்கின்றனர்" எனத் தெரிவித்தனர்.

