காவிரியில் இருந்து தமிழகத்துக்கு 12,000 கன அடி நீர் திறக்க கர்நாடக அரசுக்கு அக். 23-ல் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது. ஆனால், தமிழகத்துக்கான தண்ணீரைத் திறக்காமல் கர்நாடக அரசு தொடர்ந்து மறுத்து வருவதாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது.
தமிழகத்துக்கு இந்தாண்டு காவிரி நீர் வழங்கப்படாததால், 4 லட்சம் ஹெக்டர் நிலம் விவசாயம் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், கர்நாடக அரசு இப்படி வஞ்சித்தால் தமிழக விவசாயிகள் எப்படி விவசாயம் மேற்கொள்ள முடியும் என்று தமிழக அரசின் மனுவில் தெரிவிக்கப்பட்டது.
மேலும், தமிழகத்துக்கு தர வேண்டிய பற்றாக்குறை நீர் 11 டிஎம்சியை திறந்துவிட வேண்டும் என்றும், காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை கர்நாடக அரசு கடைப்பிடிக்க உத்தரவிடக் கோரியும் தமிழக அரசு மனுக்கள் தாக்கல் செய்தது.
இதனைத் தொடர்ந்து, தமிழகத்துக்கான தண்ணீரைத் திறந்து விடவில்லை என கர்நாடக அரசுக்கு எதிராக மூன்றாவது மனுவையும் தமிழக அரசு தாக்கல் செய்தது.
இந்த மனுக்களை இன்று (நவ. 20) உச்சநீதிமன்ற நீதிபதிகள் விக்ரம்குமார், அபரேஷ்குமார் சிங் ஆகியோர் அமர்வு விசாரித்த நிலையில், இந்த விவகாரத்தில் இன்னும் எத்தனை வழக்குகள்தான் தாக்கல் செய்வீர்கள் என கேள்வி எழுப்பினர்.
மேலும், 11 டிஎம்சி தண்ணீரைத் திறந்துவிடக் கோரிய மனு மற்றும் காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை கடைப்பிடிக்க உத்தரவிடக் கோரிய மனு ஆகிய இரு இடைக்கால மனுக்களையும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

