திருநெல்வேலி சரக காவல்துறை அலுவலகக் கூட்டரங்கில், சரக காவல்துறை துணைத் தலைவர் இரா. திருநாவுக்கரசு, தலைமையில் நிலுவை வழக்குகள் மற்றும் தொழில்நுட்ப மேம்பாடு தொடர்பான கலந்தாய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில் திருநெல்வேலி மாநகர காவல் ஆணையாளர் தேஷ்முக் சேகர் சஞ்சய், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத், திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஷ்வேஷ் பா. சாஸ்திரி, கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அன்ஷூல் நாகர், தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அசோக் குமார், திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையாளர்கள் சரவணன், மற்றும் ரமேஷ் பாபு ஆகியோர் கலந்து கொண்டனர்.

தொழில்நுட்பச் செயலாக்கம் குறித்த விளக்கம்:

கூட்டத்தில், மாநில குற்ற ஆவணக் காப்பகக் காவல் கண்காணிப்பாளர் லாவண்யா சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, காவல் துறையின் குற்ற மற்றும் குற்றவாளிகள் கண்காணிப்பு வலைப்பின்னல் திட்டத்தின் புதிய பதிப்பான CCTNS 2.0 மற்றும் ஒருங்கிணைந்த நீதித்துறை அமைப்பான ICJS 2.0 ஆகியவற்றின் செயலாக்கம் குறித்துப் பேசினார்.

மேலும், இத்தொழில்நுட்பங்களை கள அளவில் செயல்படுத்துவதில் உள்ள நடைமுறைச் சவால்கள், அவற்றைச் சரிசெய்வதற்கான வழிமுறைகள் மற்றும் காவல் நிலையங்களின் பணிகளை மேலும் டிஜிட்டல் மயமாக்குவதற்கான மேம்பாட்டு நடவடிக்கைகள் குறித்தும் அதிகாரிகளுக்கு விரிவாக விளக்கமளித்தார்.