தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூர் அருகேயுள்ள இராஜாவின்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் அன்புகுமார். இவரது மகன் கிப்சன் இமானுவேல் (19). இவர் இன்று குடிபோதையில் தனது பெற்றோருடன் தகராறு செய்துள்ளார். பின்னர் ஆத்திரத்தில் வீட்டை விட்டு வெளியேறிய கிப்சன் இமானுவேல், அங்குள்ள காற்றாலை டவர் மீது ஏறி நின்று, கீழே குதித்துத் தற்கொலை செய்துகொள்ளப் போவதாகக் கூறி மிரட்டல் விடுத்துள்ளார்.
இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாகப் புதியம்புத்தூர் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த காவல் ஆய்வாளர் சுந்தரமூர்த்தி தலைமையில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 108 ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்புத் துறையினரும் தயார் நிலையில் வரவழைக்கப்பட்டனர்.
தொடர்ந்து, காற்றாலை டவர் மீது நின்றிருந்த வாலிபரிடம் காவல் ஆய்வாளர் பேச்சுவார்த்தை நடத்தி அந்த வாலிபரை, தானாகவே டவரில் இருந்து கீழே இறங்கி வந்தார். அதனைத் தொடர்ந்து 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மூலமாக வாலிபருக்குத் தேவையான முதலுதவிகள் வழங்கப்பட்டன. பின்னர் காவல்துறையினர் அவருக்கு அறிவுரைகள் வழங்கி, அவரது பெற்றோருடன் வீட்டிற்குப் பத்திரமாக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

