இம்ரான் கானுக்கு உயர்தர சிகிச்சை அளிக்க வேண்டும் என்று கபில்தேவ், கவாஸ்கர் உள்ளிட்ட 21 முன்னாள் கேப்டன்கள் பாகிஸ்தான் பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ளனர்.
பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அந்நாட்டின் முன்னாள் பிரதமரும், முன்னாள் கிரிக்கெட் கேப்டனுமான இம்ரான் கானுக்கு மனிதாபிமான அடிப்படையில் உயர்தர மருத்துவச் சிகிச்சை வழங்க வேண்டும் என இந்தியா உட்பட 8 நாடுகளைச் சேர்ந்த 21 முன்னாள் சர்வதேச கிரிக்கெட் கேப்டன்கள் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப்பிற்கு கூட்டாகக் கடிதம் எழுதியுள்ளனர்.
பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (PTI) கட்சியின் தலைவரான இம்ரான் கான் (73), ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறையில் போதிய மருத்துவ வசதிகள் வழங்கப்படாததால், இம்ரான் கானின் வலது கண்ணில் சுமார் 85% பார்வை இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின.
குடும்பத்தினரின் தொடர் கோரிக்கையை அடுத்து, இஸ்லாமாபாத்தில் உள்ள ஷிஃபா மருத்துவமனையில் அண்மையில் மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்ட இம்ரான் கான், உடனடியாக மீண்டும் சிறைக்கு மாற்றப்பட்டார்.
இம்ரான் கானின் உடல்நிலை குறித்து கவலை தெரிவித்து இந்தியாவின் சுனில் கவாஸ்கர், கபில்தேவ், திலீப் வெங்கசர்க்கர் மற்றும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 21 முன்னாள் கிரிக்கெட் கேப்டன்கள் பாகிஸ்தான் பிரதமருக்குக் கடிதம் அனுப்பியுள்ளனர்.
அரசியல் சார்பற்ற கோரிக்கை: "நாங்கள் எந்தவொரு அரசியல் பின்புலத்திலிருந்தும் இந்தக் கடிதத்தை எழுதவில்லை; கிரிக்கெட் பயணத்தின் அடிப்படையில் மட்டுமே இதைக் கேட்கிறோம்."
பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தின் மேற்பார்வையில் அமைக்கப்பட்ட மருத்துவக் குழுவின் மூலம் இம்ரான் கானின் கண் பார்வை இழப்பிற்கு உடனடியாக உயர்தரச் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்.
அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அவரைச் சந்திக்கத் தடையின்றி அனுமதி வழங்கப்பட வேண்டும்.
முன்னதாக, கடந்த பிப்ரவரி மாதத்திலும் இம்ரான் கானுக்கு சர்வதேச தரத்திலான மருத்துவ வசதிகளை வழங்கக் கோரி 14 சர்வதேச கேப்டன்கள் பாகிஸ்தான் அரசுக்குக் கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.

