15 நாட்களுக்கு மேலாகப் பள்ளிக்கு வருகை புரியாத மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்க அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆட்சியர் விஷு மகாஜன் அறிவுறுத்தினார்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாதாந்திர மாவட்ட பள்ளிக் கல்வி செயல்பாடுகள் குறித்த மீளாய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தலைமையில் நடைபெற்றது.

15 நாட்களுக்கு மேலாகப் பள்ளிக்கு வருகை புரியாத மாணவர்களைச் சுகாதாரத்துறை, தொழிலாளர் நலத்துறை, மீன்வளத்துறை மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நலத்துறை ஆகியவை ஒருங்கிணைந்து மீண்டும் பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டது.

12-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றும் அல்லது தேர்ச்சி பெறாமலும் உயர்கல்வியில் (கலை மற்றும் அறிவியல் கல்லூரி / பாலிடெக்னிக் / ஐ.டி.ஐ) சேராத மாணவர்களின் தற்போதைய நிலைகளைக் கேட்டறிந்த ஆட்சியர், உயர்கல்வி வழிகாட்டுதல்கள் மூலம் அவர்களைக் கண்டறிந்து மீண்டும் கல்லூரிகளில் சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

இக்கூட்டத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சங்கீதா சின்னராணி, உதவி ஆட்சியர் (பயிற்சி) பாட்டீல் கிருஷ்ணா பபுருவான், தூத்துக்குடி மாவட்ட கல்வி அலுவலர் முனியசாமி மற்றும் துறை சார்ந்த அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.