அமெரிக்காவில் எச்-1பி விசா வைத்திருப்பவர்களைச் சார்ந்திருக்கும் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் எச்-4 விசாதாரர்களின் சட்டப்பூர்வ வேலை அனுமதியை ரத்து செய்வதற்கான நடைமுறைகளை அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு துறை தொடங்கியுள்ளது.
அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெறாதவர்கள் தங்கி பணியாற்ற எச்-1பி விசா வழங்கப்படுகிறது. எச்-1பி விசாதாரர்களைச் சார்ந்திருக்கும் அவர்களின் கணவர் அல்லது மனைவி மற்றும் 21 வயதுக்கு உட்பட்ட திருமணமாகாத குழந்தைகளுக்கு எச்-4 விசா வழங்கப்படுகிறது. 2014-ஆம் ஆண்டு வரை எச்-4 விசாதாரர்கள் அமெரிக்காவில் பணிபுரியச் சட்ட உரிமை இல்லை.
இதன்பின்னர் சட்ட திருத்தம் செய்யப்பட்டு, எச்-1பி விசா பெற்றவர்கள் நிரந்தர குடியுரிமைக்கு விண்ணப்பித்துக் காத்திருக்கும் பட்சத்தில், அவர்களின் துணைவர்கள் அமெரிக்காவில் வேலை செய்வதற்கான அனுமதி (EAD) விண்ணப்பித்துப் பெறலாம் என 2015-இல் சட்டம் கொண்டு வரப்பட்டது.
இந்த எச்-4 வேலை அனுமதியை 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் பெற்று அமெரிக்காவில் பணியாற்றி வருகின்றனர். அதிலும் குறிப்பாக, எச்-1பி விசாதாரர்களின் மனைவிகளே எச்-4 விசாவில் வேலை அனுமதி பெற்றுப் பணியாற்றி வருகிறார்கள்.
இந்நிலையில், எச்-4 விசாதாரர்களுக்கு வழங்கப்படும் சட்டப்பூர்வ வேலை அனுமதியை ரத்து செய்வதற்கான நடைமுறைகளை அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு துறை தொடங்கி, அது தொடர்பான பரிந்துரையைத் தனது இணையதளத்தில் முன்வைத்துள்ளது.
முன்னதாக, டொனால்ட் டிரம்ப்பின் முதல் ஆட்சிக்காலத்தில் கடந்த 2017-ஆம் ஆண்டு இதே போன்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டு, பின்னர் 2021-இல் அது கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

