அதிமுகவும் அமமுகவும் வேறு அல்ல என்றும், எப்போதும் ஒரு தொண்டனாக அதிமுகவுடன் உறுதுணையாக நிற்பேன் என்றும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியது: தூய சக்தி என்று கூறி வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகம், பெரும்பான்மை கிடைக்காத நிலையில் என்னென்ன குறுக்கு வழிகளை முயற்சி செய்து ஆட்சி அமைத்தார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். இன்றைக்கு முதல்வரும் அவரது அமைச்சர்களும் தினமும் சினிமா கதையைப் போல 'ரீல்' விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
தனது கட்சி எம்.எல்.ஏ.க்களைத் தக்கவைத்துக்கொள்ளவும், எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் தாக்குதலைத் தவிர்க்கவும் கார் கொடுப்பதாகக் கூறி, "ஊரான் வீட்டு நெய்யில் ஸ்வீட்" செய்து கொண்டிருக்கிறார் முதல்வர். என்னையும் சசிகலாவையும் மீண்டும் அதிமுகவில் சேர்க்க வேண்டும் என முன்னாள் அமைச்சர்கள் பலர் பழனிசாமிக்குக் கடிதம் எழுதியுள்ளனர். அவர்களது விருப்பம் நியாயமானதுதான்.
பழனிசாமி மீது குறை சொல்வதைக் காட்டிலும், கட்சியை மீண்டும் ஆட்சிக்குக் கொண்டு வருவதற்கு என்ன செய்ய வேண்டுமோ, அதை உள்ளிருந்து அவரோடு பேசி சரிசெய்ய வேண்டும்.
அமமுகவும் அதிமுகவும் வேறு அல்ல. இரண்டுமே மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கட்சிகள்தான். நான் எப்போதும் அதிமுகவுடன் தான் நிற்கிறேன். எப்போதும் ஒரு தொண்டனாக உறுதுணையாக நிற்பேன். மீண்டும் ஜெயலலிதாவின் ஆட்சி மலர வேண்டும். பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் நாங்கள் தொடர்ந்து பயணிப்போம் என்று தெரிவித்தார்.

