பிரதமர் நரேந்திர மோடியுடன் நேருக்கு நேர் விவாதிக்க விரும்புவதாகவும், தன்னுடன் விவாதித்த பிறகு மோடி பிரதமராக நீடிக்க மாட்டார் எனவும் காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி மீண்டும் சவால் விடுத்துள்ளார்.
பிரதமர் மோடியைத் தன்னுடன் நேருக்கு நேர் விவாதத்திற்கு வருமாறு ராகுல் காந்தி பலமுறை சவால் விடுத்து வந்துள்ளார். இதற்குப் பதிலடி கொடுத்த பா.ஜ.க. மூத்த தலைவர்கள், ‘நாடாளுமன்ற விவாதங்களில் இருந்து ராகுல் காந்தி ஓடி ஒளிகிறார்’ என்று குற்றம்சாட்டினர். மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகையில், “விவாதத்திற்கான இடத்தைத் தேர்வு செய்யுமாறு பிரதமரிடம் ராகுல் காந்தி கூறுகிறார். ஆனால், ஏற்கனவே நாடாளுமன்ற அவையில் விவாதத்திற்கான இடம் இருக்கிறது. எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் அவர் பொறுப்புடன் செயல்பட வேண்டும்” என விமர்சித்திருந்தார்.
இந்நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘என்னிடம் கேளுங்கள்’ (Ask Me Anything) என்ற தலைப்பில் பொதுமக்களின் பல்வேறு கேள்விகளுக்கு ராகுல் காந்தி பதிலளித்தார். அப்போது பயனர் ஒருவர், “நாடாளுமன்றத்தில் விவாதிக்கலாம் என்று பா.ஜ.க. அழைப்பு விடுத்த பிறகும், நீங்கள் ஏன் பிரதமர் மோடியை நேருக்கு நேர் விவாதத்திற்கு அழைக்கிறீர்கள்?” என்று கேள்வி எழுப்பினார்.
அதற்குப் பதிலளித்த ராகுல் காந்தி கூறியதாவது: “நாடாளுமன்ற மக்களவையில் என்னைப் பேச அனுமதிப்பதில்லை; எனது மைக்கை ஆஃப் செய்துவிடுகின்றனர். விவசாய மசோதாக்கள், வாக்குத் திருட்டு, எஸ்.ஐ.ஆர். பணிகள், சீனா விவகாரம், ஜெனரல் நரவானேயின் புத்தகம், எப்ஸ்டீன் பைல்ஸ் ஆகிய முக்கிய விஷயங்களைப் பற்றிப் பேச என்னை அவர்கள் அனுமதிக்கவில்லை.
எனக்கு நீண்ட உரைகளைக் கொண்ட விவாதம் வேண்டாம்; நேருக்கு நேர் விவாதம் வேண்டும். நரேந்திர மோடி என் மீது குற்றச்சாட்டுகளை முன்வைக்க வேண்டும், நானும் அவர் மீது அதையே செய்ய வேண்டும் என விரும்புகிறேன். அங்கே ஒரு மேசை இருக்கும்; அதன் ஒருபுறம் நரேந்திர மோடியும், மறுபுறம் நானும் இருப்போம்.
அந்த விவாதத்திற்கு அதானி குழுமத் தலைவர் கவுதம் அதானி அல்லது ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் நடுவராக நியமிக்கப்பட்டாலும் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால், என்னுடன் நேருக்கு நேர் விவாதித்த பிறகு, மோடி பிரதமராக நீடிக்க மாட்டார் என்று நான் உறுதியளிக்கிறேன்.”
இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். அவரது இந்தக் கருத்து தேசிய அரசியலில் பெரும் விவாதத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

