அ.தி.மு.க.வின் கொள்கை நிலைப்பாடுகள் மற்றும் நிகழ்வுகள் குறித்துப் பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் மற்றும் சமூக ஊடகங்களில் கருத்து தெரிவிப்பதற்கு முன்பு கட்சித் தலைமையின் அனுமதியைப் பெற வேண்டும் என அ.தி.மு.க. தலைமை உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக அ.தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் நல்லாசியோடு அ.தி.மு.க. கட்டுக்கோப்பான இயக்கமாகச் செயல்பட்டு வருகிறது. அந்த வகையில், தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கட்சியின் செய்தித் தொடர்பாளர்கள் உள்ளிட்ட அனைத்து நிலைகளிலும் பணியாற்றி வரும் நிர்வாகிகள், கட்சியின் கருத்துகள் மற்றும் நிகழ்வுகள் குறித்த நிலைப்பாடுகள் தொடர்பாகக் கட்சித் தலைமையின் அனுமதி பெற்ற பின்னரே பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் மற்றும் சமூக ஊடகங்களுக்குப் பேட்டி அளிக்கவும், கருத்து தெரிவிக்கவும் வேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நிர்வாகிகள் அறிக்கை ஏதேனும் வெளியிடுவதாக இருந்தால், கண்டிப்பாகத் தலைமையின் ஒப்புதலைப் பெற்ற பிறகே வெளியிட வேண்டும் என்றும், நிர்வாகிகள் அனைவரும் இந்த உத்தரவை முழுமையாகப் பின்பற்ற வேண்டும் என்றும் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியின் ஒப்புதலோடு வெளியிடப்பட்டுள்ள அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.