ஆசிரியர்களின் 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தூத்துக்குடி நகர்ப்புறம் டிக்டோ ஜாக் சார்பில் வட்டாரக் கல்வி அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழக ஆசிரியர் கூட்டணி வட்டாரத் தலைவர் ஞானக்கண் பாண்டியன் மற்றும் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி வட்டாரத் தலைவர் லியோன் வசந்தி ஆகியோர் கூட்டுத் தலைமை வகித்தனர். தமிழக ஆசிரியர் கூட்டணி மாவட்டத் தலைவரும், டிக்டோ ஜாக் மாவட்ட உயர்மட்டக் குழு உறுப்பினருமான பிரின்ஸ் கோரிக்கைகளை விளக்கி உரையாற்றினார்.

பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும்; ஆசிரியர்களுக்குத் தனி பணிப் பாதுகாப்புச் சட்டம் இயற்ற வேண்டும். 55 வயதிற்கு மேற்பட்ட ஆசிரியர்களுக்கு மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்; அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

முன்னதாக தமிழக ஆசிரியர் கூட்டணி வட்டாரச் செயலாளர் லியோ அனைவரையும் வரவேற்றார். நிறைவாக தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வட்டாரச் செயலாளர் புனிதா நன்றி கூறினார்.