காயல்பட்டினம் தீவுத்தெருவில் அமைந்துள்ள நகராட்சி தொடக்கப் பள்ளி நிலம் முழுவதும் அரசுக்கே சொந்தமானது என்றும், அங்குத் தனிநபர்கள் மேற்கொள்ளும் எந்தவொரு ஆக்கிரமிப்பும் சட்டப்பூர்வ உரிமையாகாது என்றும் திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் மற்றும் உட்கோட்ட நடுவர் ரா. கௌதம் அதிரடித் தீர்ப்பு வழங்கியுள்ளார்.

காயல்பட்டணம் தென்பாகம் கிராம நத்தம் புல எண் 682/19 நிலத்தில், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியும், நகராட்சி தொடக்கப்பள்ளியும் இயங்கி வருகின்றன. 1934-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்நகராட்சி தொடக்கப் பள்ளி, 1938-இல் அங்கீகாரம் பெற்று, 1959-இல் உயர்நிலைப் பள்ளியாகவும், 1981-இல் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியாகவும் மேம்படுத்தப்பட்டது. இ நிலம் நீண்டகாலமாகக் கல்வி நோக்கத்திற்காக அரசால் பயன்படுத்தப்பட்டு வருவது இதன் மூலம் உறுதியாகிறது.

அரசுக்குச் சொந்தமான அதே நிலத்திலும் கட்டடத்திலும், ‘பாத்திமா நர்சரி பள்ளி’ (பின்பு பாத்திமா மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி) என்ற பெயரில் சட்டவிரோதமாகத் தனியார் பள்ளி இயங்கி வந்தது. கடந்த 2013 ஜூன் 9 அன்று, அப்போதைய ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி கட்டடத்திற்குள் சட்டவிரோதமாக நுழைந்த கும்பல் ஒன்று, முக்கியக் கோப்புகளை எரித்துச் சாம்பலாக்கி வன்முறையில் ஈடுபட்டது.

இச்சம்பவம் தொடர்பாக ஆறுமுகநேரி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். வழக்கினை விசாரித்த தூத்துக்குடி 2-வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம், இச்செயலை சமுதாயத்திற்கு எதிரான கொடூரச் செயல் எனச் சுட்டிக்காட்டி, குற்றம் சாட்டப்பட்ட பாலசுப்பிரமணியன், மலைமேகம், அந்தோணி ராஜ், ஸ்ரீதர் ஆகியோருக்கு 13 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ₹54,000 அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்தது (வழக்கில் தொடர்புடைய முகமது பாரூக் என்பவர் இறந்துவிட்டார்).

இச்சம்பவத்திற்குப் பிறகும், தனியார் பள்ளியை நடத்தியவர்கள் அரசுப் பள்ளி மாணவர்களின் பயன்பாட்டில் இருந்த கழிப்பறைகள் மற்றும் குடிநீர் இணைப்புகளை ஆக்கிரமித்துப் பூட்டி இடையூறு செய்து வந்தனர்.

இந்நிலம் நத்தம் நிலவரி திட்டத்தின் கீழ் ‘அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி’ எனக் குறிப்புடன் பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், நூருல் அமீன் என்பவர் 2022 நவம்பரில் இந்நிலம் தனது குடும்பத்திற்குச் சொந்தமானது எனக் கூறிப் பட்டா கோரி திருச்செந்தூர் வட்டாட்சியரிடம் விண்ணப்பித்தார். மேலும் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையிலும் வழக்குத் தொடர்ந்தார்.

உயர்நீதிமன்ற உத்தரவின்படி, திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் மற்றும் உட்கோட்ட நடுவர் ரா. கௌதம் முன்னிலையில் விசாரணை நடைபெற்றது. பள்ளி மேலாண்மைக் குழு நடவடிக்கை: நகராட்சி தொடக்கப் பள்ளி சார்பில் வழக்கறிஞர் ம. மெய்தீன் அப்துல் காதர் நியமிக்கப்பட்டு ஆஜரானார். விசாரணையில் பள்ளித் தலைமையாசிரியர், வழக்கறிஞர், பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் மற்றும் காயல்பட்டினம் நகராட்சித் தலைவர், நகராட்சி ஆணையாளர், துணைத் தலைவர் ஆகியோர் கலந்துகொண்டு வலுவான ஆதாரங்களைச் சமர்ப்பித்தனர்.

காயல்பட்டணம் தென்பாகம் கிராம நத்தம் புல எண் 682/19-இல் உள்ள நிலம் முழுவதும் அரசுக்கு மட்டுமே சொந்தமானது என்பது ஊர்ஜிதம் செய்யப்படுகிறது. இந்நிலத்தில் வேறு எந்தவொரு தனிநபரும் மேற்கொள்ளும் எந்த அனுபவமும் சட்டபூர்வ உரிமையை ஏற்படுத்தாது; அது ஆக்கிரமிப்பாக மட்டுமே கருதப்படும்.நிலத்திற்குப் பட்டா பெயர் மாற்றம் செய்யக்கோரி நூருல் அமீன் தாக்கல் செய்த மனு முற்றிலும் தள்ளுபடி செய்யப்படுகிறது.

தனியார் பள்ளியின் 50 ஆண்டுகால ஆக்கிரமிப்பிற்குச் செக் வைக்கும் வகையில் திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் பிறப்பித்துள்ள இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க உத்தரவு, காயல்பட்டினம் பொதுமக்களிடையேயும் கல்வி ஆர்வலர்களிடையேயும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.