தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நடராஜபுரம் தெருவைச் சேர்ந்தவர் ஜானகி. இவர் ஈராச்சியில் உள்ள அரசுப் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறார். தற்போது பள்ளிகளுக்குக் காலாண்டு விடுமுறை அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த 27-ஆம் தேதி ஜானகி திருப்பூரில் வசித்து வரும் தனது மகனின் வீட்டிற்குச் சென்றுள்ளார்.
இந்நிலையில், நேற்று மாலை ஜானகியின் வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவரது உறவினர் தவமாரி, இது குறித்து உடனடியாக ஜானகிக்கும், கோவில்பட்டி மேற்கு காவல் நிலையப் போலீசாருக்கும் தகவல் கொடுத்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் ஆய்வு செய்தபோது, வீட்டின் முன்பக்கக் கதவு உடைக்கப்பட்டிருந்தது மட்டுமின்றி, வீட்டிற்குள் இருந்த பீரோவும் உடைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. அதிர்ஷ்டவசமாக வீட்டிலிருந்த பொருட்கள் எதுவும் திருடப்படவில்லை என்று கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலையப் போலீசார் வழக்குப் பதிவு செய்து, மர்ம நபர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

