விளாத்திகுளம் அருகே வைப்பார் ஆற்றுப்படுகையை ஒட்டிய பகுதியில், நள்ளிரவில் சட்டவிரோதமாக மணல் அள்ளப்பட்டு வருவதாகவும், இதற்கு அரசு அதிகாரிகள் துணை போவதாகவும் தமிழக வெற்றிக்கழக நிர்வாகி குற்றம் சாட்டியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள மேட்டுப்பட்டி கிராமத்தில் சுமார் 8 ஏக்கர் பரப்பளவில், 50 அடி ஆழத்திற்கு ஜேசிபி இயந்திரங்கள் மற்றும் 50-க்கும் மேற்பட்ட டிராக்டர்களைப் பயன்படுத்தி கடந்த மூன்று நாட்களாகத் தொடர்ந்து மணல் திருட்டு நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தால், புகார் அளித்த பொதுமக்களின் தொலைபேசி எண்களை மணல் மாபியாக்களிடம் அதிகாரிகளே வழங்கி மிரட்டுவதாக பொதுமக்கள் தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.
இதுகுறித்து தமிழக வெற்றிக்கழக நிர்வாகி எபநேசர் கூறுகையில்: "மேட்டுப்பட்டி கிராமம் அருகே உள்ள தனியார் நிலத்தின் வழியாகச் சுமார் 30 அடி அகலத்திற்குப் பிரத்யேகப் பாதை அமைத்து, இரவு முழுவதும் சட்டவிரோதமாக மணல் அள்ளப்பட்டு வருகிறது. வைப்பார் ஆற்றில் தண்ணீர் இன்றி விளாத்திகுளம் பகுதியில் குடிநீர்ப் தட்டுப்பாடு நிலவி வரும் சூழலில், இந்த மணல் திருட்டால் நிலத்தடி நீர்மட்டம் மேலும் சரிந்து வருங்காலத்தில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் ஆபத்து உருவாகியுள்ளது.
இப்பகுதியில் உள்ள சிலர் தற்போதைய அரசின் பெயருக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையிலும், ஆளும் கட்சியின் தூண்டுதலின் பேரிலும் செயல்பட்டு வருகிறார்கள். எனவே, மணல் திருட்டில் ஈடுபடும் நபர்கள் மீதும், அவர்களுக்குத் துணை போகும் வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் மீதும் தமிழக அரசு உடனடியாகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

