அமைச்சர் மதன்ராஜாவின் ஓட்டப்பிடாரம் தொகுதிக்கு உட்பட்ட நேரு நகர் சுனாமி காலனியில் கடந்த 20 நாட்களாகக் குடிநீர் வழங்கப்படாததைக் கண்டித்து, அப்பகுதி மக்கள் தூத்துக்குடி-ராமேஸ்வரம் சாலையில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கோமஸ்புரம் அருகே நேரு நகர் சுனாமி காலனி அமைந்துள்ளது. இங்கு 80-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப் பகுதிக்கு 20 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் வழங்கப்பட்டு வருவதாகவும், விநியோகிக்கப்படும் தண்ணீரும் சுகாதாரமற்ற முறையில் இருப்பதால், பணத்தைக் கொடுத்துக் குடிநீரை விலைக்கு வாங்கும் அவலநிலை நீடிப்பதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மாதம் ரூ.2,000 வாடகை கொடுத்து வசிக்கும் நிலையில், குடிநீருக்காக மட்டுமே மாதம் ரூ.2,000 செலவிட வேண்டிய சூழல் உள்ளதாகவும், சமைக்கவும் குளிக்கவும் தண்ணீர் இன்றித் தவிப்பதாகவும் வேதனை தெரிவித்தனர். இது குறித்துப் பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள், திருநங்கைகள் மற்றும் இளைஞர்கள் இணைந்து, கோமஸ்புரம் அருகே தூத்துக்குடி-ராமேஸ்வரம் சாலையில் இன்று திடீர் மறியலில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தால் தூத்துக்குடி-ராமேஸ்வரம் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

உடனடியாகக் குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் உறுதியளித்ததைத் தொடர்ந்து, பொதுமக்கள் சாலை மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனர். தங்கள் பகுதிக்கு அடிப்படை வசதிகளை விரைந்து செய்து தர தமிழக அரசும் முதலமைச்சரும் உடனடியாகத் தலையிட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.