சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘ஜெயிலர் 2’ திரைப்படம் திட்டமிட்டபடி வரும் அக்டோபர் 15-ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகும் எனத் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் மீண்டும் திட்டவட்டமாக உறுதிப்படுத்தியுள்ளது.

இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த 'ஜெயிலர்' திரைப்படம் சுமார் ₹600 கோடிக்கும் மேல் வசூலித்து மாபெரும் சாதனை படைத்தது. அதைத் தொடர்ந்து உருவாகி வரும் 'ஜெயிலர் 2' திரைப்படம், 1000 கோடி ரூபாய் வசூல் சாதனையை எட்டும் எனத் திரைத்துறையினரால் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படத்தின் ரிலீஸ் தள்ளிப்போவதாக சமீபத்தில் வதந்திகள் பரவிய நிலையில், அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அக்டோபர் 15 ரிலீஸை சன் பிக்சர்ஸ் உறுதி செய்துள்ளதுடன், இம்மாதம் முதல் படத்தின் தீவிர விளம்பரப் பணிகளை (Promotions) தொடங்கவும் திட்டமிட்டுள்ளது.

சமீபத்தில் வெளியான பெரிய படங்களின் எதிர்பார்த்த வசூல் ஏமாற்றமளித்த நிலையில், தமிழ் சினிமா வர்த்தகத்தையும் திரையரங்க உரிமையாளர்களையும் மீட்டெடுக்க ‘ஜெயிலர் 2’ படத்தின் வெற்றி மிகவும் அவசியமாகப் பார்க்கப்படுகிறது.

ஜெயிலர் 2 படத்தின் முடிவைப் பொறுத்தே, ரெட் ஜெயன்ட் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் - கமல்ஹாசன் இணையவுள்ள பிரம்மாண்டப் படத்தின் அடுத்தகட்ட நகர்வுகள் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

இயக்குநர் நெல்சன் தனது வழக்கமான அதிரடி மற்றும் நகைச்சுவைப் பாணியில் இப்படத்தைச் செதுக்கியுள்ளதால், 'ஜெயிலர் 2' மீண்டும் ஒரு வரலாற்றுச் சாதனையைப் படைக்கும் என ரசிகர்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.