தூத்துக்குடியில், உயர்கல்வி வழிகாட்டுதல் மற்றும் நேரடி சேர்க்கை முகாமினை மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் துவக்கி வைத்து மாணாக்கர்களுக்கு கருத்துரை வழங்கினார்

துத்துக்குடி மாநகராட்சிகுட்பட்ட சுப்பையா வித்யாலயா பெண்கள் மேல்நிலைப்பள்ளி கூட்டரங்கில் இன்று (21.08.2026), 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மற்றும் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டுதல் மற்றும் நேரடி சேர்க்கை முகாமினை மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் துவக்கி வைத்து மாணாக்கர்களுக்கு கருத்துரை வழங்கினார்.

பின்னர் மாவட்ட ஆட்சியர் தெரிவிக்கையில் துத்துக்குடி மாநகராட்சி சுப்பையா வித்யாலயா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் உயர்கல்வி வழிகாட்டுதல் மற்றும் நேரடி சேர்க்கை முகாம் மூலம் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மற்றும் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்காக இன்றையதினம் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த வழிகாட்டு முகாமில் 12ஆம் வகுப்புக்கு பிறகு மாணவர்கள் தங்களின் திறமைக்கு ஏற்ப சரியான பட்டப்படிப்பை தேர்வு செய்வது குறித்தும் மற்றும் படிப்பிற்கான கல்வி உதவித்தொகை கிடைப்பது குறித்தும், கல்வித்துறைகள் மூலம் உங்களுக்கு ஆலோசனை வழங்கப்படும். நமது மாவட்டம் இன்னும் 10 ஆண்டுகளில் தொழில் வளர்ச்சி அடைந்த மாவட்டமாக உருவெடுக்கும். குறிப்பாக 50 கோடி அளவிற்கு முதலீடு ஈர்க்கும் வகையில் பல்வேறு தனியார் நிறுவனங்கள் அமையவுள்ளது. அதனடிப்படையில் பெரிய அளவில் வேலைவாய்ப்பு உருவாகக்கூடிய சூழ்நிலை உள்ளது.

ஆகவே, சொந்த மாவட்டத்திலேயே வேலைவாய்ப்பு கிடைக்க கூடிய சூழ்நிலை உங்களுக்கு கிடைக்கும். பொறியியல் படிப்பு, கலை மற்றும் அறிவியல் கல்லூரி படிப்பை மட்டுமே தேர்ந்தெடுக்க முன்வருவீர்கள். ஆனால் அதுமட்டுமல்லாமல், ஐ.டி.ஐ மற்றும் பாலிடெக்னிக் படிப்புகளை தேர்வு செய்ய முன்வரவேண்டும். ஐ.டி.ஐ. மற்றும் பாலிடெக்னிக் படிப்புகள் மூலம் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப, 95 சதவீதம் வேலைவாய்ப்பு கிடைக்க உள்ளது.

அதன் அடிப்படை சம்பளமும் உயர உள்ளது. ஆகவே பெற்றோர்களுக்கு ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். உங்கள் குழந்தைகளை ஐ.டி.ஐ மற்றும் பாலிடெக்னிக் படிப்புகளில் சேர்க்க முன்வர வேண்டும். இதுபோன்ற நல்ல வாய்ப்பினை மாணவர்கள் பயன்படுத்தி உயர்கல்வி பயின்று உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என ஆட்சியர் விஷு மகாஜன் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சங்கீதா சின்னராணி, வட்டார கல்வி அலுவலர் முனியசாமி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் விநாயகமூர்த்தி மற்றும் மாணவ மாணவியர்கள், பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.