எஸ்பிஐ ஏடிஎம்களில் 4 முறைக்கு மேல் பணம் எடுத்தால் ரூ. 15+ ஜிஎஸ்டி கட்டணம் வசூலிக்கப்படும் என்ற தகவல் குறித்து பாரத ஸ்டேட் வங்கி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

அக்டோபர் 1 முதல் அமலுக்கு வரும் இந்தக் கட்டண மாற்றம் 'அடிப்படை சேமிப்பு வைப்புக் கணக்கு' (BSBDA - Basic Savings Bank Deposit Account) வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே பொருந்தும். குறைந்தபட்ச இருப்புத் தொகை (Minimum Balance) பராமரிக்கத் தேவையில்லாத எளிய சேமிப்புக் கணக்குகளாகும்.

இக்கணக்கு வைத்திருப்போர் மாதத்திற்கு முதல் 4 முறை ஏடிஎம்மில் பணம் எடுப்பது முற்றிலும் இலவசம். 4 முறைக்கு மேல் பணம் எடுக்கும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ரூ. 15 + ஜிஎஸ்டி கட்டணமாக வசூலிக்கப்படும். அனைத்து விதமான டிஜிட்டல் பரிவர்த்தனைகளையும் எவ்வித கட்டணமுமின்றி வழக்கம்போல் மேற்கொள்ளலாம்.

மற்ற வழக்கமான சேமிப்புக் கணக்கு (Regular Savings Account) வைத்துள்ள வாடிக்கையாளர்களுக்கு இதில் எந்த மாற்றமும் இல்லை. அவர்கள் வழக்கம்போல் மாதத்திற்கு 5 முறை இலவசமாக ஏடிஎம்மில் பணம் எடுத்துக்கொள்ளலாம். டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கவும், வங்கிக் கிளையில் கூட்டத்தைக் குறைக்கவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வாடிக்கையாளர்களின் ஆதங்கம்:

பொருளாதாரத்தில் பின்தங்கிய சாமானிய மக்கள் பயன்படுத்தும் அடிப்படை சேமிப்புக் கணக்கிற்கு 4 முறைக்கு மேல் கட்டணம் விதிப்பது இத்திட்டத்தின் நோக்கத்தையே கேள்விக்குறியாக்குகிறது என வாடிக்கையாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பல ஏடிஎம்களில் ரூ. 500 நோட்டுகள் கிடைக்காததால், சிறு தொகைகளை பலமுறை எடுக்க வேண்டிய சூழல் ஏற்படுவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.