தனது பெயர், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அனுமதியின்றிப் பயன்படுத்தியதாக அமெரிக்காவைச் சேர்ந்த செயற்கை நுண்ணறிவு (AI) நிறுவனம் மீது 'தி லெஜண்ட்' பட நாயகி ஊர்வசி ரவுடேலா சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

இந்தித் திரைப்படத்துறை மூலம் அறிமுகமாகி கன்னடம், பெங்காலி, தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் நடித்து வருபவர் ஊர்வசி ரவுடேலா. தமிழில் லெஜண்ட் சரவணன் நடித்த 'தி லெஜண்ட்' திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடையேயும் பிரபலம் அடைந்தார்.

இந்நிலையில், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரைச் சேர்ந்த முன்னணி ஏ.ஐ. நிறுவனம் ஒன்று, தனது பெயர், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உரிய அனுமதியின்றிப் பயன்படுத்தியதாக ஊர்வசி ரவுடேலா குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக நடிகை ஊர்வசி ரவுடேலாவின் வழக்கறிஞர் குழு சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள அறிக்கையில் "லாஸ் ஏஞ்சல்ஸைச் சேர்ந்த ஏ.ஐ. நிறுவனத்திற்கு எதிராக உரிய சட்டப்பூர்வ நடவடிக்கைகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகிறோம்.

அனுமதியற்றப் பயன்பாட்டிற்காக அந்த நிறுவனத்திடம் இருந்து சுமார் ரூ.7,000 கோடி ($850 Million) வரை இழப்பீடு கோருவது குறித்து வழக்கறிஞர்களுடன் இணைந்து மதிப்பீடு செய்யப்பட்டு வருகிறது.

ஏ.ஐ. நிறுவனங்கள் தங்களது தொழில்நுட்பத்தை வளர்த்துக்கொள்வதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால், ஒரு தனிநபரின் தோற்றம், பெயர் மற்றும் அடையாளத்தை வணிக நோக்கில் பயன்படுத்துவதற்கு உரிய முன் அனுமதி பெறுவது கட்டாயமாகும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் அதிவேக வளர்ச்சியால், பிரபலங்களின் பெயர், குரல், புகைப்படம் மற்றும் தோற்றத்தை அனுமதியின்றிப் பயன்படுத்தி 'டீப்ஃபேக்' (Deepfake) வீடியோக்கள் உருவாக்குவது உலகளவில் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது.

ஏற்கெனவே பல திரைப் பிரபலங்கள் இதற்கு எதிராகக் குரல் கொடுத்து வரும் நிலையில், நடிகை ஊர்வசி ரவுடேலா ரூ.7,000 கோடி இழப்பீடு கோரி ஏ.ஐ. நிறுவனத்திற்கு எதிராக எடுத்துள்ள இந்த அதிரடி நடவடிக்கை சர்வதேசத் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.