இந்தியாவின் 80-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வகையில், ஆகஸ்ட் 15-ஆம் நாளை ‘இந்திய சுதந்திர நாள்’ என அமெரிக்காவின் நியூயார்க் மற்றும் நியூ ஜெர்சி ஆகிய இரு முக்கிய மாநிலங்கள் அதிகாரப்பூர்வமாகப் பிரகடனம் செய்துள்ளன.

இந்தியாவின் சுதந்திரப் போராட்டம், சுதந்திர நாடாக இந்தியாவின் வளர்ச்சி மற்றும் அமெரிக்காவில் வாழும் இந்திய-அமெரிக்கச் சமூகத்தினரின் முக்கிய பங்களிப்புகளை அங்கீகரிக்கும் வகையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

நியூயார்க் ஆளுநர் கேத்தி ஹோச்சுல் மற்றும் நியூ ஜெர்சி ஆளுநர் மிக்கி ஷெரில் ஆகியோர் இந்த அதிகாரப்பூர்வ பிரகடனத்தை வெளியிட்டிருப்பதாக நியூயார்க்கில் உள்ள இந்தியத் தூதரகம் தனது 'எக்ஸ்' (X) தளத்தில் உறுதிப்படுத்தியுள்ளது. இந்தியா-அமெரிக்கா இடையிலான நீண்டகால நட்புறவை போற்றும் வகையில் இந்த அறிவிப்பை வெளியிட்ட இரு மாநில ஆளுநர்களுக்கும் தூதரகம் நன்றி தெரிவித்துள்ளது.

நியூயார்க் மற்றும் நியூ ஜெர்சியில் அதிகளவிலான இந்திய வம்சாவளியினர் வசித்து வரும் நிலையில், அங்குள்ள அவர்களின் கலாச்சார மற்றும் சமூக பங்களிப்புகளுக்கு இந்த அறிவிப்பு பெருமை சேர்த்துள்ளது. இதற்கு முன்னதாக அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் ஆளுநர் மவுரா ஹீலி மற்றும் பாஸ்டன் மேயர் மிஷெல் வூ ஆகியோரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதியை ‘இந்தியா தினம்’ என அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் சுமார் 54 லட்சம் இந்திய வம்சாவளியினர் வசித்து வருகின்றனர். அங்குள்ள ஆசிய இனக்குழுக்களில் இவர்கள் 3-வது பெரிய குழுவாக உள்ளனர். அமெரிக்காவில் உள்ள பல்வேறு மாநில அரசுகளும் உள்ளூர் நிர்வாகங்களும் இந்திய சுதந்திர தின கொண்டாட்டங்களை அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்து ஆண்டுதோறும் இத்தகைய பிரகடனங்களை வெளியிட்டு வருகின்றன.