தூத்துக்குடியில் மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தலைமையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான மேம்பாட்டு திட்டங்கள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான மேம்பாட்டுச் செயல்திட்டச் சட்டம் மற்றும் மாவட்டக் கண்காணிப்புக் குழு தொடர்பான காலாண்டு ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தலைமையில் இன்று (11.08.2026) நடைபெற்றது.
இக்கூட்டத்தில் 2026 - 2027ஆம் நிதியாண்டில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்காகச் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு அரசு நலத்திட்டப் பணிகள் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது.
குறிப்பாக, முதலமைச்சர் உழவர் பாதுகாப்புத் திட்டம், நிதி ஒதுக்கீடு விவரங்கள், வழங்கப்பட்ட நலத்திட்ட உதவிகள், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை, மகளிர் திட்டப் பணிகள் மற்றும் தோட்டக்கலைத்துறை சார்பிலான திட்டங்கள் குறித்து ஆட்சியர் கேட்டறிந்தார்.
மேலும், அயோத்திதாச பண்டிதர் குடியிருப்புகள் மேம்பாட்டுத் திட்டம், தாட்கோ (TAHDCO) மூலம் செயல்படுத்தப்படும் முதலமைச்சரின் பொருளாதார மேம்பாட்டிற்கான தொழில்முனைவோர் திட்டம், பிரதான் மந்திரி அனுசுசித் ஜாதி அபியுதாய் யோஜனா, நன்னிலம் மகளிர் நில உடைமைத் திட்டம், அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடித் திட்டம், சத்துணவுத் திட்டங்கள் மற்றும் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவித் திட்டம் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சிப் பணிகளின் முன்னேற்றம் குறித்தும் பயனாளிகளின் விவரங்கள் குறித்தும் ஆட்சியர் தீவிர ஆய்வு மேற்கொண்டார்.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் திரு. பென்னட் ஆசீர் உட்பட அனைத்து அரசுத் துறை சார்ந்த அலுவலர்களும் கலந்துகொண்டனர்.

