தன்னுடன் பயணிக்கும் ஆதரவாளர்கள் தங்கள் கையில் 'நாட்டாமை குடும்பம்' என்று பச்சை குத்திக் கொள்ள வேண்டும் என நடிகரும் பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகியுமான சரத்குமார் விருப்பம் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய நடிகர் சரத்குமார் கூறியதாவது: என்னைப் பொறுத்தவரை என்னுடன் பயணித்தவர்கள் இன்று வரை என்னுடன் இருப்பதுதான் எனக்குப் பெரிய மகிழ்ச்சி. அவர்கள் அரசியல் ரீதியாக வேறு தளங்களில் இருந்தாலும், என் மீது இன்றளவும் அதே பாசத்தோடு இருக்கிறார்கள்.
அந்த பாசப் பிணைப்பின் காரணமாகவே, அனைவரும் 'நாட்டாமை குடும்பம்' என்ற அடையாளத்தை வைத்துக்கொண்டால் சிறப்பாக இருக்கும் எனத் தோன்றியது. படப்பிடிப்புகள் நிலுவையில் உள்ளதால் நான் இன்னும் பச்சை குத்தவில்லை. படப்பிடிப்பு முடிந்ததும் என் கையிலும் 'நாட்டாமை குடும்பம்' என்ற முத்திரை இடம்பெறும்.
பச்சை குத்துவது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்: பச்சை குத்துவது என்பது உணர்வோடு சம்பந்தப்பட்டது. இது அனைவருக்கும் கட்டாயமில்லை. மருத்துவ ரீதியாக ஒவ்வாமை உள்ளவர்கள் இதைத் தவிர்க்கலாம். பச்சை குத்துவது என்பது பண்டைய காலத்திலிருந்தே நடைமுறையில் உள்ள ஒன்று. இது உணர்வை உறுதிப்படுத்தும் ஒரு 'கிரீன் கார்டு' போன்றது. எனக்குத் தேசப்பற்று அதிகம் என்பதால், ஏற்கனவே எனது வலது தோள்பட்டையில் இந்திய தேசியக் கொடியைப் பச்சை குத்தியுள்ளேன் என்று அவர் பேசினார்.

