செல்போன் பயனர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, 'தொலைத்தொடர்பு நுகர்வோர் பாதுகாப்பு (13-வது திருத்தம்) விதிமுறைகள், 2026'-ஐ டிராய் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. இதன் மூலம் ப்ரீபெய்ட் பயனர்களுக்குக் கூடுதல் ரீசார்ஜ் விருப்பங்களும், சிறந்த நுகர்வோர் பாதுகாப்பும் உறுதி செய்யப்பட்டுள்ளன.

இதுவரை பல்வேறு கட்டண திட்டங்களில் வழங்கப்பட்டு வந்த 28 நாள் காலாவதி கெடுவுக்குப் பதிலாக, 30 நாட்கள் அல்லது அதற்கு குறைவான காலாவதி கொண்ட புதிய பேக்குகளைத் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அறிமுகம் செய்ய வேண்டும்.

28 நாள் திட்டங்களால் வாடிக்கையாளர்கள் ஆண்டுக்கு 13 முறை ரீசார்ஜ் செய்ய வேண்டிய நிலை இருந்தது. இனி ஆண்டிற்கு 12 முறை ரீசார்ஜ் செய்தால் போதுமானது.

இன்டர்நெட் / டேட்டா சேவைகள் தேவையில்லாத மூத்த குடிமக்கள் மற்றும் குறைந்த வருவாய் பிரிவு பயனர்களைக் கருத்தில் கொண்டு, டேட்டா இல்லாத வெறும் அழைப்பு (Voice Calls) மற்றும் எஸ்.எம்.எஸ். (SMS) மட்டும் வழங்கும் குறைந்த கட்டணச் சிறப்பு வவுச்சர்கள் அறிமுகப்படுத்தப்படும்.

ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட ஒரே தேதியில் தானாகப் புதுப்பித்துக் கொள்ளக்கூடிய (Auto-renewal) சிறப்புக் கட்டண வவுச்சர்கள் வழங்கப்படும். இணையதளப் பயன்பாடு தேவையில்லாத வாடிக்கையாளர்களுக்காகக் குறைந்த விலையிலான எஸ்.எம்.எஸ். திட்டங்கள் பிரத்யேகமாக உருவாக்கப்படும்.