18 வயதுக்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்குச் சட்டப்பூர்வக் கட்டுப்பாடுகளை விதிக்க அரசு திட்டமிட்டுள்ளதாக வெளியாகிய செய்திகள் முற்றிலும் போலியானவை மற்றும் ஆதாரமற்றவை என மத்திய அரசு வட்டாரங்கள் இன்று விளக்கம் அளித்துள்ளன.

சமூக ஊடகங்கள் மற்றும் பிற டிஜிட்டல் தளங்களைப் பயன்படுத்தும் குழந்தைகளுக்குத் தகுந்த பாதுகாப்பு கோரி 'ஜஸ்ட் ரைட்ஸ் ஃபார் சில்ட்ரன் அலையன்ஸ்' (JRCA) அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது.

இந்தியத் தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பாக்சி மற்றும் வி. மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு இம் மனுவை விசாரித்தது. அப்போது, 18 வயதுக்குட்பட்டவர்கள் சுயமாக ஒப்பந்தங்களில் ஈடுபடச் சட்ட ரீதியாக இயலாமை உள்ளது என்பதைக் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், சிறார்களை நிர்வகிக்கும் இந்தியச் சட்டங்களுக்குச் சமூக ஊடகத் தளங்கள் இணங்கிச் செயல்படுவதை உறுதிசெய்யும் சட்டப்பூர்வக் கட்டமைப்பை உருவாக்குவது குறித்து ஆராயுமாறு மத்திய அரசிடம் கேட்டுக்கொண்டனர்.

இதற்குப் பதிலளித்துப் பேசிய சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, இந்த விவகாரம் குறித்து மத்திய அரசு விரிவாக ஆராயும் எனத் தெரிவித்தார். சமூக ஊடகங்களில், குறிப்பாக இளைஞர்களுக்கான உள்ளடக்கங்களை ஒழுங்குபடுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் சமீப மாதங்களாகப் பரவலாக முன்வைக்கப்பட்டு வருகின்றன:

முன்னாள் தலைமை நீதிபதி கவலை: இணைய வழியிலான தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கங்களில் இருந்து குழந்தைகளையும் இளைய தலைமுறையினரையும் நாடு பாதுகாக்க வேண்டியது அவசியம் என்றும், இணைய உள்ளடக்கங்களுக்குச் சில கட்டுப்பாடுகளைக் கொண்டுவரும் ஒழுங்குமுறைச் சட்டங்கள் வரும் எனத் தாம் நம்புவதாகவும் இந்தியாவின் முன்னாள் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் குறிப்பிட்டிருந்தார்.

ஹர்பஜன் சிங் எம்.பி. கோரிக்கை: மாநிலங்களவையில் பேசிய கிரிக்கெட் வீரரும் எம்.பி.யுமான ஹர்பஜன் சிங், "பல குழந்தைகள் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகத் தளங்களுக்கு அடிமையாகி, மிக இளம் வயதிலேயே பாலியல் சார்ந்த உள்ளடக்கங்களைப் பார்க்க நேரிடுகிறது. இது அவர்களின் மனநலத்தைப் பாதித்து, பதற்றம் மற்றும் மனச்சோர்வை அதிகரிக்கிறது" எனக் கூறி, ஆபாச இணையதளங்களைத் தடுக்கக் கடுமையான சட்டங்கள் இயற்ற வேண்டும் என வலியுறுத்தியிருந்தார்.

இத்தகைய சூழலில் தான், 18 வயதுக்குட்பட்டோருக்குச் சமூக ஊடகத் தடைகள் விதிக்கப்படவுள்ளதாகப் பரவிய வதந்திகளுக்கு மத்திய அரசு தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளது.