தெலுங்கானா மாநிலம் சங்காரெட்டி மாவட்டம் படான்செரு பகுதியில் உள்ள ஷிரீஷா அறக்கட்டளை அனாதாசிரமத்தில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு நடத்தப்பட்டது. பூைஜகள் முடிந்த நிலையில், புதன்கிழமை மாலையில் பெத்தகஞ்சர்லா கிராமத்தில் உள்ள நேரேடு செருவு ஏரிக்குச் சிலையைக் கரைப்பதற்காக அனாதாசிரமத்தைச் சேர்ந்த 8 மாணவர்கள் சென்றுள்ளனர்.

மாலை நேரத்தில் போதிய வெளிச்சம் இல்லாததாலும், அப்பகுதியில் சாலைப் பணிகளுக்காக ஏரியின் உட்பகுதியில் தோண்டப்பட்டிருந்த ஆழமான குழி குறித்து அறியாததாலும், மாணவர்கள் எதிர்பாராதவிதமாகச் சேற்றுடன் கூடிய ஆழமான பகுதிக்குச் சென்றுள்ளனர்.

இதில் நீச்சல் தெரியாததால் நரசிம்மா (21), தேஜா (17), சித்தார்த்தா (17), கணேஷ் (18), சுமந்த் ரெட்டி (17) மற்றும் உதய் கிரண் (22) ஆகிய 6 மாணவர்களும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் தீவிரத் தேடுதல் வேட்டைக்குப் பிறகு 6 மாணவர்களின் உடல்களையும் மீட்டனர். உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

இச்சம்பவம் குறித்துப் படான்செரு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி இரங்கல்:

இக்கோர விபத்து குறித்துத் தகவலறிந்த தெலுங்கானா முதலமைச்சர் ஏ. அனுமுலா ரேவந்த் ரெட்டி மற்றும் மாநில ஆளுநர் ஆகியோர் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினருக்குத் தேவையான உதவிகளை உடனடியாக வழங்குமாறும், இனிவரும் நாட்களில் நீர்நிலைகளில் சிலை கரைப்பு நிகழ்வுகள் நடக்கும் இடங்களில் போதிய பாதுகாப்பு வசதிகள் மற்றும் காவல் துறை பாதுகாப்பை உறுதி செய்யுமாறும் அதிகாரிகளுக்கு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.