தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரை அடுத்த அருளாட்சி இந்திரா நகரைச் சேர்ந்தவர் ஜெயமுருகன். இவரது மகன் மணிகண்டன் (34). இவர் புளியங்குடி மின்வாரியத்தில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றி வந்தார். புன்னையாபுரத்தில் இருந்து முந்தல் செல்லும் வழியில் மின் தடை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதனைச் சரிசெய்வதற்காக அப்பகுதி மின் ஊழியர் இசக்கி மற்றும் அவரது உதவியாளராக மணிகண்டன் ஆகியோர் சம்பவ இடத்திற்குச் சென்றுள்ளனர். அப்போது இசக்கி, பழுதான டிரான்ஸ்ஃபார்மருக்குச் செல்லும் மின்சாரத்தை நிறுத்துவதற்குப் பதிலாக, தவறாக வேறொரு டிரான்ஸ்ஃபார்மருக்குச் செல்லும் மின்சாரத்தைத் துண்டித்துள்ளார்.
இதனை அறியாத மணிகண்டன், பழுதான டிரான்ஸ்ஃபார்மரில் ஏறி பழுதைச் சீரமைக்க முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மணிகண்டன் மீது அதிகளவில் மின்சாரம் பாய்ந்து தீக்காயம் ஏற்பட்டதுடன், 20 அடி உயரத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டதில் தலையில் பலத்த காயமடைந்தார்.
அங்கிருந்தவர்கள் அவரை உடனடியாக மீட்டுப் புளியங்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர், மேல்சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த மணிகண்டன், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்துச் சொக்கம்பட்டி காவல் ஆய்வாளர் மதுவிக்ரம் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். உயிரிழந்த மணிகண்டனுக்கு மதுமிதா என்ற மனைவியும், 2 வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர்.

