ஆந்திர மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு அதிகளவில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் கொண்டு வரப்பட்டு, தூத்துக்குடியை முக்கியக் கேந்திரமாகக் கொண்டு கடல் வழியாக இலங்கைக்குக் கடத்தப்படும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
இதனைக் கட்டுப்படுத்தும் வகையில், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவப்பிரசாத் உத்தரவின் பேரிலும், டவுன் டி.எஸ்.பி. சுனில் ஆலோசனையின் பேரிலும் தனிப்பிரிவு காவல்துறையினர் நேற்று இரவு தூத்துக்குடி பீச் ரோட்டில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது திரேஸ்புரம் கடற்கரையை நோக்கி அதிவேகமாகச் சென்ற லாரி ஒன்றை காவல்துறையினர் மறித்து நிறுத்தினர். லாரியில் இருந்த 3 பேரைப் பிடித்துச் சோதனை செய்ததில், தலா 1 கிலோ எடையுள்ள 24 பண்டல்களில் மொத்தம் 24 கிலோ கஞ்சா மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுப் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில், இந்த கஞ்சாவைத் தூத்துக்குடி கடல் வழியாக இலங்கைக்குக் கடத்த முயன்றது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட தூத்துக்குடி எஸ்.எஸ். பிள்ளை தெருவைச் சேர்ந்த வேல்முருகன் மகன் செல்லப்பெருமாள் என்ற கட்டப்பெருமாள் (24), வேப்பலோடையைச் சேர்ந்த முருகேசன் மகன் ராம்குமார் (29), அழகிய பொன்னையபுரத்தைச் சேர்ந்த முருகவேல் மகன் ஜெகன் (24) ஆகிய 3 பேரையும் கைது செய்து, கடத்தலுக்குப் பயன்படுத்திய லாரியையும் பறிமுதல் செய்தனர்.
மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தூத்துக்குடியில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் கடலோரப் பகுதிகள் மற்றும் வாகன சோதனைகளில் சுமார் 100 கிலோ கஞ்சா வரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

