மதுரை கோட்ட எல்லைக்குட்பட்ட திருநெல்வேலியுடன் நிறுத்தப்படும் சிறப்பு ரயில்களைத் திருவனந்தபுரம் கோட்டத்தின்கீழ் உள்ள நாகர்கோவில் மற்றும் கன்னியாகுமரி வரை நீட்டித்து இயக்க வேண்டும் எனக் குமரி மாவட்ட பயணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தென்மேற்கு ரயில்வே மண்டலம் சார்பில் இயக்கப்படும் 'பெங்களூரு - திருநெல்வேலி' சிறப்பு ரயில் வெள்ளிக்கிழமை இரவில் பெங்களூரிலிருந்து புறப்பட்டுச் சனிக்கிழமை மதியம் திருநெல்வேலி வந்தடைகிறது. மறுமார்க்கமாகச் சனிக்கிழமை மதியமே புறப்பட்டு ஞாயிறு அதிகாலை பெங்களூரு சென்று சேர்கிறது.

தமிழகத்தின் தென் எல்லையான கன்னியாகுமரி மாவட்டத்திற்கு இச்சேவையை விரிவாக்காமல் மதுரை கோட்ட எல்லை முடிவடையும் திருநெல்வேலியுடனேயே நிறுத்தி விடுகின்றனர். இதேபோல் உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் மற்றும் கான்பூரில் இருந்து மதுரை வரை இயக்கப்படும் சிறப்பு ரயில்களையும் கன்னியாகுமரி வரை நீட்டிக்க மதுரை கோட்டம் தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வருகிறது.

இச்சிறப்பு ரயில்களை நீட்டிக்கத் திருவனந்தபுரம் கோட்ட அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தைக்கு மதுரை கோட்டம் போதிய ஒத்துழைப்பு வழங்க மறுத்துவிட்டது. இரு கோட்டங்களுக்கும் இடையே நிலவும் இந்த நிர்வாகச் சிக்கலைத் தீர்க்க வேண்டிய தெற்கு ரயில்வே மண்டலத் தலைமையகமும் மௌனம் காத்து வருகிறது.

சிறப்பு ரயில்களை நீட்டிப்பது என்பது முழுமையாக மண்டல ரயில்வே (Southern Railway) அதிகார வரம்பிற்குட்பட்ட ஒன்றாகும்.

முன்பு நாகர்கோவில் தொகுதி எம்பியாகத் திரு. பெல்லார்மின் இருந்தபோது, தெற்கு ரயில்வே பொது மேலாளரை (GM) நேரில் சந்தித்து வலியுறுத்தியதன் பலனாகத் திருநெல்வேலியுடன் நிறுத்தப்பட்ட சிறப்பு ரயில்கள் அனைத்தும் நாகர்கோவில் வரை நீட்டிக்கப்பட்டு இயக்கப்பட்டன.

அதேபோல் தற்போதைய கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினரும் தெற்கு ரயில்வே பொது மேலாளரை நேரில் தொடர்புகொண்டு, மதுரை மார்க்கத்துச் சிறப்பு ரயில்களை நாகர்கோவில் / கன்னியாகுமரி வரை நீட்டிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கடந்த வாரம் நாகர்கோவில் வழியாக இயக்கப்பட்டு வரும் 'கொச்சுவேலி (திருவனந்தபுரம் வடக்கே) – வேளாங்கண்ணி' சிறப்பு ரயிலுக்குக் குமரி மாவட்ட மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. எனவே பயணிகளின் நலன் கருதி இச்சிறப்பு ரயிலைத் தொடர்ந்து நிரந்தரமாக இயக்க வேண்டும் என்றும் பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.