கூட்டத்தில் ஆட்சியர் ஆனந்த் மோகன் பேசுகையில்: "திருநெல்வேலி மாவட்டத்தில் ஆகஸ்ட் மாதத்தில் 24.30 மி.மீ மழையும், செப்டம்பர் 17-ஆம் தேதி வரை 13.76 மி.மீ மழையும் பெய்துள்ளது. இது இம்மாத சராசரி மழையளவை விட 54.44 சதவீதம் குறைவாகும்.

மாவட்டத்தில் ஆகஸ்ட் மாதம் வரையில் 13,489.92 ஹெக்டேர் பரப்பில் வேளாண் பயிர்களும், 8,179.38 ஹெக்டேர் பரப்பில் தோட்டக்கலை பயிர்களும் சாகுபடி செய்யப்பட்டுள்ளன" எனத் தெரிவித்தார்.

வேளாண் அடுக்ககம் வலைதளத்தில் இதுவரை 31,069 பி.எம்.கிசான் பயனாளிகள் மற்றும் 17,165 இதர விவசாயிகளின் விவரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. பிரதமரின் கௌரவ நிதியுதவி, பயிர் கடன், உரங்கள் மற்றும் நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்ய உழவர் அடையாள எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

எனவே, இதுவரை பதிவு செய்யாத 6,292 விவசாயிகள் மற்றும் விடுபட்ட நிலப் புல எண்களை இணைக்க விரும்பும் விவசாயிகள் உடனடியாகப் பொது சேவை மையங்கள் அல்லது வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகங்களை அணுகலாம்.

காரிப் பருவகால மின்னணு பயிர் கணக்கீட்டுப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், விவசாயிகள் தங்களது பயிர் சாகுபடி விவரங்களைத் தாங்களே பதிவேற்றம் செய்ய 'சஹாயக்' செயலி உருவாக்கப்பட்டுள்ளது.

மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி வாயிலாக 710 விவசாயிகளுக்கு ரூ.9.82 கோடியும், 1110 கால்நடை விவசாயிகளுக்கு ரூ.10.19 கோடியும் கடன் வழங்கப்பட்டுள்ளது. பி.எம்.கிசான் திட்டத்தில் e-KYC செய்யாமல் நிலுவையிலுள்ள 1,362 பயனாளிகளுக்கும், வங்கிக் கணக்குடன் ஆதார் எண் இணைக்காத 989 பயனாளிகளுக்கும் அப் பணிகளைச் செய்து முடிக்க அலுவலர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

கடந்த ஆகஸ்ட் மாதக் கூட்டத்தில் பெறப்பட்ட 171 மனுக்களுக்கும் உரிய பதில்கள் துறை ரீதியாக அனுப்பப்பட்டுள்ளன. நெல் ஜெயராமன் பாரம்பரிய விதைகள் பாதுகாப்பு இயக்கத்தின் கீழ் ஒரு பயனாளிக்கு ரூ.700 மானியத்தில் மரபுசார் நெல் விதையும், தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் கீழ் எலுமிச்சை பரப்பு விரிவாக்கத்திற்கு ஒரு பயனாளிக்கு ரூ.30,000 மானியமும் வழங்கப்பட்டது.

மேலும், வேளாண் இயந்திரமயமாக்கும் திட்டம் தொடர்பான விழிப்புணர்வுக் கையேட்டையும் ஆட்சியர் ஆனந்த் மோகன் வெளியிட்டார். இக்கூட்டத்தில் மாவட்ட வன அலுவலர் இளங்கோ, வேளாண்மை இணை இயக்குநர் பூவண்ணன் உட்பட அரசு அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.