தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கவுள்ள நிலையில், தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப் படகு மீன்பிடித் துறைமுகத்தில் மீன்களை வாங்க பொதுமக்களின் வருகை குறைந்த காரணத்தினால் மீன்களின் விலை சரிவைக் கண்டுள்ளது.
திரேஸ்புரம் நாட்டுப் படகு மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 100-க்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகளில் மீனவர்கள் ஆழ்கடலுக்குச் சென்று மீன்பிடித்து வருகின்றனர். இவ்வாறு ஆழ்கடல் மீன்பிடிப்புக்குச் சென்ற மீனவர்கள் நேற்று சனிக்கிழமை கரை திரும்பினர்.
இதனிடையே, குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து வருவதால், திரேஸ்புரம் மீன்பிடித் துறைமுகத்தில் மீன்களை வாங்குவதற்கான பொதுமக்களின் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது.
இதன் எதிரொலியாக வழக்கத்தைவிட மீன்களின் விலை குறைந்து விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதன்படி விளைமீன், ஊழி, பாறை உள்ளிட்ட மீன் வகைகள் கிலோ ரூ.300 முதல் ரூ.400 வரை விற்பனை செய்யப்பட்டன. நண்டு கிலோ ரூ.600 வரையிலும் விற்பனையானது. கேரை மீன் கிலோ ரூ.230-க்கு விற்பனை செய்யப்பட்டது.

