ராமநாதபுரம் முடுக்கு தருவை பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு போதைப்பொருள் தடுப்பு அமலாக்கப் பிரிவு போலீசார் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, சந்தேகத்தின் பேரில் நின்ற 5 பேரைப் பிடித்து விசாரணை நடத்தினர். அவர்கள் ராமநாதபுரத்தைச் சேர்ந்த குப்புசாமி, பரமக்குடியைச் சேர்ந்த செல்வராஜ் மற்றும் தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் பகுதியைச் சேர்ந்த 3 பேர் என்பது தெரியவந்தது.
போலீசாரின் தீவிர விசாரணையில், அவர்களிடமிருந்து 38 தங்கக் கட்டிகள், 28 பவுன் நகை மற்றும் ரூ.12.20 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டன. முக்காணி தாமிரபரணி ஆற்றில் ஒரு தங்க மூட்டை கிடைத்ததாகவும், அவற்றைப் பகிர்ந்து கொள்வதற்காக ராமநாதபுரம் வந்ததாகவும் முக்காணியைச் சேர்ந்த 3 பேரும் தெரிவித்தனர். இதையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட தங்கக் கட்டிகள், நகைகள் மற்றும் பணத்தைக் கேட்பாரற்றுக் கிடந்தவை எனக் கருவூலத்தில் ஒப்படைத்த போலீசார், இவ்வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றினர்.
இவ்வழக்கு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. துணைக் கண்காணிப்பாளர் அஜய் தங்கம் தலைமையிலான போலீசார் ஆத்தூர் காவல் நிலையத்திற்கு வந்து, ஆத்தூர் ஆற்றங்கரை பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி (28) என்பவர் மீது சந்தேகம் இருப்பதாகத் தெரிவித்து அவரது வீட்டில் சோதனை நடத்தினர்.
அவரது வீட்டிலிருந்து தங்கச் சங்கிலி, ஆரம், மோதிரம், கைச்சங்கிலி, கம்மல் என மொத்தம் 54 பவுன் தங்க நகைகளும், ரூ.67 ஆயிரம் ரொக்கமும் கண்டெடுக்கப்பட்டன. இது குறித்துக் கருப்பசாமியிடம் கேட்டபோது, தசரா திருவிழாவுக்காக வேடம் அணியும் பக்தர்களுக்கு முடி மற்றும் வேடப் பொருட்கள் தயாரித்து விற்பனை செய்து சம்பாதித்த பணத்தில் அவற்றை வாங்கியதாகக் கூறினார்.
ஆனால், அவரது பதில் நம்பும்படியாக இல்லை எனக் கூறி நகை மற்றும் பணத்தைப் பறிமுதல் செய்த போலீசார், கருப்பசாமியைக் கைது செய்தனர். இவ்வழக்கில் ஆத்தூர், முக்காணி பகுதியைச் சேர்ந்த வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

