இது தொடர்பாகச் அவர் எக்ஸ் (X) தளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது: "தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் வேகமாகப் பரவி வரும் டெங்கு காய்ச்சலால் பல நூற்றுக்கணக்கான மக்கள் நாள்தோறும் பாதிக்கப்பட்டு வருவது மிகுந்த கவலையளிக்கிறது. ஒரே நாளில் 244 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னையில் மட்டும் 87 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை தமிழ்நாட்டில் 16,577 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை, கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் பாதிப்பு தீவிரமாக உள்ளது. டெங்கு காய்ச்சலுக்கு இதுவரை 9 பேர் உயிரிழந்த துயரச் செய்தி மிகுந்த மனவேதனை அளிக்கிறது."

"மழைக்காலம் தொடங்கவுள்ள நிலையில், கொசுக்களால் பரவும் டெங்கு காய்ச்சலால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகள் குவியத் தொடங்கியுள்ளனர்.

நோய்த்தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தாமல் மிக மெத்தனமாகச் செயல்பட்டு மக்களின் உயிரோடு விளையாடும் தமிழ்நாடு சுகாதாரத் துறையின் அலட்சிய அணுகுமுறை வன்மையான கண்டனத்திற்குரியது."

தமிழ்நாடு அரசு உடனே விழித்துக்கொண்டு சிறப்பு மருத்துவர் குழுவை அமைத்து, டெங்கு தடுப்பு வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.மாநகரங்கள் முதல் சிற்றூர்கள் வரை நடமாடும் மருத்துவ முகாம்கள் மூலம் தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட வேண்டும்.

அரசு மருத்துவமனைகள் மற்றும் மக்கள் கூடுமிடங்களில் நிலவேம்பு குடிநீர், கபசுரக் குடிநீர் உள்ளிட்ட நோயெதிர்ப்பு ஆற்றல் தரும் பாரம்பரிய மருந்துகளைப் போர்க்கால அடிப்படையில் வழங்க வேண்டும் என்று சீமான் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.