தமிழகத்தில் நவோதயா பள்ளிகளைத் தொடங்க உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்துத் தமிழக அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு மனு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.வி. நாகரத்னா மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் மாசிஹ் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜெய்தீப் குப்தா, "தமிழகத்தில் கிராமப்புற மாணவர்களுக்கும் தரமான கல்வி வழங்கும் வகையிலான பள்ளி உள்கட்டமைப்பு மிகச் சிறப்பாக உள்ளது. எனவே, நவோதயா பள்ளிகள் தேவையில்லை என்பதே அரசின் நிலைப்பாடு. மேலும், நவோதயா பள்ளிகளில் பின்பற்றப்படும் மும்மொழிக் கொள்கை, தமிழகத்தின் இருமொழிக் கொள்கைக்கு முரணானது. மும்மொழிக் கொள்கையை ஏற்காததால் தமிழகத்திற்கு வர வேண்டிய ரூ.5,000 கோடிக்கும் அதிகமான கல்வி நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது" என்று வாதிட்டார்.
நீதிபதிகளின் கேள்வி : "மொழிதான் பிரச்சினை என்றால் இந்திக்கு பதிலாக வேறு ஒரு மொழியைப் பயிற்றுவிக்கலாமே? நவோதயா பள்ளிகள் விவகாரத்தில் தமிழக அரசு தனது மனநிலையை மாற்றிக் கொள்ள வேண்டும்" எனக் கருத்து தெரிவித்தனர்.
மத்திய அரசு தரப்பு வாதம்: மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் நட்ராஜ் ஆஜராகி, "மொழிக் கொள்கை குறித்து இரு தரப்பும் அமர்ந்து பேசினாலே தீர்வு காண முடியும். மூன்றாவது மொழியாக இந்தி அல்லது வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம் என்பதே புதிய கல்விக் கொள்கையின் சாராம்சம்" எனத் தெரிவித்தார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் "தமிழகத்தில் ஆட்சி மற்றும் அரசு மாறியுள்ள சூழலில், இப் பிரச்சினையிலும் மனநிலையில் சில மாற்றங்களை எதிர்பார்க்கிறோம். கல்விக்குத் தமிழக அரசு அளிக்கும் முக்கியத்துவத்தையும் செலவினங்களையும் பாராட்டி ஏற்கும் அதே வேளையில், மத்திய அரசின் கொள்கையை ஏற்பதால் சரணடைந்து விட்டதாக அர்த்தமில்லை.
எனவே, நவோதயா பள்ளிகளை நிறுவுவதற்காக நிலங்களை அடையாளம் காண ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவை நடைமுறைப்படுத்த 3 மாத கால அவகாசம் வழங்கப்படுகிறது. மேலும், கொள்கை முரண்பாடுகளைக் களைய மத்திய-மாநில உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். அப்பேச்சுவார்த்தையின் போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ரூ.5,000 கோடி கல்வி நிதி குறித்தும் விவாதித்துத் தீர்வு காண வேண்டும்." என்று தெரிவித்தனர். இவ்வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை நீதிமன்றம் டிசம்பர் 14-ஆம் தேதிக்குத் தள்ளிவைத்தது.

