கன்னியாகுமரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் சார்பில் நாகர்கோவில் பொன்ஜெஸ்லி பொறியியல் கல்லூரி கலையரங்கில் மாணவர்களுக்கான தூய்மை விழிப்புணர்வு விழா மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தலைமையில் இன்று (17.09.2026) நடைபெற்றது.

நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் தூய்மை பணியாளர்களை கௌரவித்து பரிசுகளை வழங்கி, தூய்மையே சேவை தொடர்பான வினாடி வினா போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கினார்.

விழாவில் அவர் பேசுகையில்- கன்னியாகுமரி மாவட்டத்தைத் தூய்மையாக வைத்துக்கொள்ளப் பாடுபடும் தூய்மைப் பணியாளர்களின் சேவையை மிகவும் பாராட்டுக்குரியது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியின் முதன்மை நோக்கமே மாணவர்களிடையே நேர்மறையான மாற்றத்தைக் கொண்டுவருவதுதான். கன்னியாகுமரி மாவட்டம், சென்னைக்கு அடுத்தபடியாக அதிக மக்கள் தொகை அடர்த்தி கொண்ட மாவட்டமாக விளங்குகிறது.

மேலும், தமிழகத்திலேயே அதிக கல்வியறிவு பெற்ற மக்கள் வாழும் மாவட்டமாகவும் திகழ்கிறது. இத்தகைய சிறப்புமிக்க மாவட்டத்தில் தூய்மையே சேவை தொடர்பான விழிப்புணர்வையும் மாற்றத்தையும் ஏற்படுத்த முடியவில்லையென்றால், வேறு எந்த மாவட்டத்திலும் அதைச் சாதிக்க முடியாது. மாவட்டத்தில் தினமும் டெங்கு பாதிப்புகள் பதிவாகி வரும் சூழலில், வீடுகளிலேயே குப்பைகளை மட்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை எனத் தனித்தனியாகப் பிரித்து வழங்குவது மிகவும் அவசியம்.

முதியவர்களிடம் இந்த மாற்றத்தை வலியுறுத்தும்போது நாங்கள் பல ஆண்டுகளாக இப்படித்தான் செய்கிறோம் என்ற பாரம்பரியப் பதிலே கிடைக்கிறது. எனவே, மாணவச் செல்வங்களான உங்களிடமிருந்தே இந்த மாற்றத்தை உருவாக்கும் விதமாக இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. மேலும் வீடுகளில் ஒரே டப்பாவிலோ அல்லது நெகிழிப் பைகளிலோ குப்பைகளைச் சேகரித்துச் தெருக்களில் வீசுவதைத் தவிர்க்க வேண்டும்.

இன்றைய தலைமுறையினராகிய மாணவர்கள், தங்கள் வீடுகளிலேயே குப்பைகளைச் சரியான முறையில் வகைப்படுத்திப் தூய்மை பணியாளர்களிடம் வழங்க வேண்டும். அதன்வாயிலாக சுற்றுச்சூழலைப் பாதுகாக்க நாம் அனைவரும் உறுதியேற்க வேண்டும்.

குப்பைகளை தரம் பிரிப்பது தூய்மை காவலர்களின் பணி என நினைக்க கூடாது. வீடுகளிலிருந்து வெளியேறும் குப்பைகளை முதன்முதலில் பிரித்து தருவது பொதுமக்களின் கடமையாகும். தூய்மை காவலர்களிடம் மொத்தமாக குப்பையைக் கொடுத்து, அவர்களையே பிரித்துக் கொள்ளட்டும் என்று கூறுவது தவறான அணுகுமுறையாகும்.

வீடுகளிலிருந்து சேகரிக்கப்படும் மட்கும் மற்றும் மக்காத குப்பைகளை எடுத்துச் சென்று, அவற்றை மறுசுழற்சி மற்றும் திடகழிவு மேலாண்மை மையங்களுக்கு அனுப்பிச் செயலாக்குவது மட்டுமே தூய்மை காவலர்களின் பணியாகும். ஈரக் கழிவுகள், வீடுகளில் சேரும் காய்கறிகள், பழங்களின் கழிவுகள் மற்றும் எஞ்சிய உணவுப் பொருட்கள் உள்ளிட்டவைகள் மட்கும் குப்பைகளாகும். நெகிழி (பிளாஸ்டிக்) கவர்கள் உள்ளிட்டவைகள் மட்காத குப்பைகளாகும்.

பொதுமக்கள் அனைவரும் தங்களை தங்களே தூய்மை தூதுவர்களாக உணர்ந்து, சுற்றுச்சூழலையும் தூய்மைப் பணியாளர்களின் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கும் வகையில், 4 வெவ்வேறு வண்ணக் குப்பத்தொட்டிகளைப் பயன்படுத்தி கழிவுகளை எவ்வாறு பிரிக்க வேண்டும் என்பது குறித்து விரிவாகக் விளக்கப்பட்டது.

குறிப்பாக பச்சை நிற தொட்டியில் சமையலறை காய்கறிக் கழிவுகள், பழக்கழிவுகள் மற்றும் எஞ்சிய உணவுப் கழிவுகள் போன்ற ஈரக்கழிவுகளை இதில் சேகரிக்க வேண்டும். நீல நிற தொட்டியில் நெகிழி கவர்கள், பிளாஸ்டிக் பாட்டில்கள், சாக்லேட் தாள்கள் போன்ற உலர் கழிவுகளை இதில் போட வேண்டும். இவை அனைத்தும் மறுசுழற்சி செய்யப்பட்டு வேறு பயன்பாட்டிற்குட்படுத்தப்படும்.

மேலும் சிவப்பு நிற தொட்டியில் பயன்படுத்திய டயாப்பர்கள் மற்றும் சுகாதார நாப்கின்கள் ஆகியவற்றை இதில் சேகரிக்க வேண்டும். தூய்மை காவலர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, இவற்றைக் கழிவு மேலாண்மைக்காக வழங்கும்போது முறையாகத் தாள்களில் பொதிந்து மட்டுமே ஒப்படைக்க வேண்டும். தொடர்ந்து கருப்பு நிற தொட்டியில் (வீட்டில் பயன்படாத பேட்டரிகள், செல்போன்/மின் சாதனக் கழிவுகள், டியூப்லைட்கள், பெயிண்ட் டப்பாக்கள், பூச்சிக்கொல்லி மருந்து பாட்டில்கள், காலாவதியான மருந்துகள் மற்றும் ஊசிகள் போன்ற சிறப்பு கவனம் தேவைப்படும் ஆபத்தான கழிவுகளை இதில் போட வேண்டும்.

தங்கள் வீடுகளிலேயே குப்பைகளை மட்கும் குப்பை, மக்காதவை என குறைந்தபட்சம் இரண்டு பிரிவுகளாகப் பிரித்து தூய்மை காவலர்களிடம் வழங்க வேண்டும். வீடுகளிலிருந்தே குப்பைகளைப் பிரிக்கத் பழக வேண்டும். இதன்மூலம் சமூகத்தில் நாம் நல்ல மாற்றங்களை எதிர்பார்க்கலாம். இன்று நாம் செய்யும் இந்தச் சிறிய மாற்றம், எதிர்காலத்தில் பெரும் நேர்மறையான மாற்றத்திற்கு வழிவகுக்கும். எதிர்காலத்தில் உயர்பதவிகளை வகிக்கப் போகும் மாணவர்களாகிய நீங்கள் சமூகப் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.

சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைப்பது சிறிய விஷயமாகத் தோன்றினாலும், அதுவே மிகப்பெரிய சமூக மாற்றத்தின் தொடக்கமாகும். வெளிமாநிலம் மற்றும் வெளிஊர்களில் இருந்து கன்னியாகுமரி, பேச்சுப்பாறை, திற்பரப்பு உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களுக்கு வரும் மக்களுக்கு மாவட்டத்தைப் பற்றிய நன்மதிப்பை உருவாக்குவது தூய்மையான பராமரிப்பே ஆகும்.

நமது மாவட்டத்தை குப்பையில்லா மாவட்டம் என்பதை சுற்றுலா வரும் பயணிகளிடம் உணர்த்தும் வகையில் தூய்மையை பாரமரிக்க வேண்டும். தூய்மைப் பணியை அரசாங்கம் மட்டுமே செய்துவிட முடியாது. பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் பங்களிப்பே இதற்கு மிக முக்கியம். மாணவர்கள் முதலில் தங்கள் வீடு, தெரு மற்றும் ஊரைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டும்.

அக்டோபர் 2-ஆம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, தூய்மைப் பாரதத் திட்டத்தின் நோக்கம் ஒவ்வொரு கிராமத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டுமென்பதேயாகும். கிராமங்கள் தன்னிறைவு பெற்றால் மட்டுமே தேசமும் வளர்ச்சி அடையும். எனவே, மாணவர்கள் இந்தத் தூய்மை விழிப்புணர்வைத் தங்கள் பெற்றோர், நண்பர்கள், உடன்பிறந்தவர்கள் மற்றும் உறவினர்களிடம் கொண்டு சேர்த்து, மாவட்டத்தைச் சுத்தமாகவும் அழகாகவும் உருவாக்க முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என பேசினார்கள்.

அதனைத்தொடர்ந்து விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகளை கண்டுகளித்தார். தொடர்ந்து தூய்மையே சேவை தொடர்பான வினாடி வினா போட்டி நடத்தப்பட்டு, அதில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கினார்கள். தூய்மை காவலர்களுக்கு பரிசுகள் வழங்கி கௌரவித்தார். முன்னதாக தூய்மையே சேவை விழிப்புணர்வு உறுதிமொழியினை அனைவரும் ஏற்றுக்கொண்டார்கள்.

விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் டி.வி.சாய்சரண் ரெட்டி, உதவி ஆட்சியர் பயிற்சி ர.மோனிகா, பொன்ஜெஸ்லி பொறியியல் கல்லூரி முதல்வர் நடராஜன், பேராசிரியர் அருள்சன் டேனியல், ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.