ஜம்மு-காஷ்மீரின் கிஸ்த்வார் மாவட்ட வனப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது மாயமான இரண்டு சிறப்பு காவல் அதிகாரிகள் (SPO), துப்பாக்கிக் குண்டுகளால் துளைக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
கிஸ்த்வார் மாவட்டத்தில் உள்ள டச்சான் மற்றும் மர்வா வனப்பகுதியில், சிறப்பு நடவடிக்கைக் குழுவைச் (SOG) சேர்ந்த ரஷ்பால் சிங் (45) மற்றும் பாபி சந்த் (57) ஆகிய இரண்டு சிறப்பு காவல் அதிகாரிகள் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இவர்கள் இருவரும் கியார் முகாமிலிருந்து பஸ்னான் பகுதியில் உள்ள ராணுவ முகாமை நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தபோது, திடீரெனத் தொடர்பு துண்டிக்கப்பட்டு மாயமாகினர். முன்னதாக, மாலை நேரத்தில் தெஹர்னா வனப்பகுதியில் துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதாகவும், அதன் பின்னர் அவர்களது செல்போன்கள் அணைக்கப்பட்டுத் தொடர்பு கொள்ள முடியாமல் போனதாகவும் தகவல்கள் வெளியாகின.
அடர்ந்த வனப்பகுதி மற்றும் தொலைத்தொடர்பு வசதியற்ற இடத்தில் காவலர்கள் மாயமானதைத் தொடர்ந்து, இந்திய ராணுவம், சிஆர்பிஎஃப் (CRPF) மற்றும் ஜம்மு-காஷ்மீர் காவல்துறையினர் இணைந்து தீவிர தேடுதல் பணியில் இறங்கினர்.
இந்நிலையில், அவர்கள் ஆயுதங்களுடன் காணாமல் போன இடத்திலிருந்து சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ள டச்சான் வனப்பகுதியில், இருவரது உடல்களும் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டன. இருவரது உடலிலும் துப்பாக்கியால் பலமுறை சுடப்பட்ட காயங்கள் இருந்ததை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
சிறப்பு காவல் அதிகாரிகள் சுட்டுக் கொல்லப்பட்ட இச்சம்பவத்தில் பயங்கரவாதிகளுக்குத் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் ஜம்மு-காஷ்மீர் காவல்துறையினரும் இந்திய ராணுவத்தினரும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், வனப்பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளனரா என்பதைக் கண்டறியப் பாதுகாப்புப் படையினர் அப்பகுதியில் தேடுதல் வேட்டையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

