காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சித் தலைவர் சோனியா காந்தி எழுதியுள்ள ‘பிலாங்கிங்: எ ஜர்னி ஆஃப் லவ்’ (Belonging: A Journey of Love) என்ற சுயசரிதை நூல் குறித்து ராகுல் மற்றும் பிரியங்கா காந்தியுடன் உரையாடிய வீடியோவில், ராஜீவ் காந்தியின் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டது திட்டமிட்ட செயல் என சோனியா மற்றும் ராகுல் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதற்கிடையே, அப்புத்தகத்தின் 201 மற்றும் 443-வது பக்கங்களில் வீர் சாவர்க்கர் குறித்து இடம்பெற்றுள்ள கருத்துகளுக்கு ஆதாரம் சமர்ப்பிக்க வேண்டும் அல்லது மன்னிப்பு கேட்க வேண்டும் என அவரது கொள்ளுப் பேரன் சத்யகி சாவர்க்கர் சோனியா காந்திக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொல்லப்பட வேண்டும் என்பதற்காகவே அவரது பாதுகாப்புத் திரும்பப் பெறப்பட்டதாகக் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சோனியா காந்தி மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் குற்றம் சாட்டியுள்ளனர்.

சுயசரிதை நூல் உரையாடலில் குற்றச்சாட்டு:

சோனியா காந்தி ‘பிலாங்கிங்: எ ஜர்னி ஆஃப் லவ்’ என்ற பெயரில் தனது சுயசரிதையை எழுதியுள்ளார். இப்புத்தகம் குறித்துத் தனது பிள்ளைகளான ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோருடன் சோனியா காந்தி கலந்துரையாடிய வீடியோவை எக்ஸ் (X) தளத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில் பேசிய சோனியா காந்தி, தனது நினைவுகளிலிருந்து எழுதிய ‘பிலாங்கிங்’ புத்தகத்திற்கு ராகுலும் பிரியங்காவும் தங்களது நினைவுகளைச் சேர்த்துப் புதிய உயிரூட்டம் அளித்ததாகக் குறிப்பிட்டார். மேலும், தந்தையின் பாதுகாப்பு குறித்து முன்பே அச்சம் தெரிவித்த ராகுல், “அம்மா, நாம் அப்பாவின் பாதுகாப்பிற்காக ஏதாவது செய்யவில்லை என்றால், நான் மிக விரைவில் அவரது இறுதிச் சடங்கில் பங்கேற்க வேண்டி வரும் என்பது எனக்குத் தெரியும்” என்றும், “அப்பா கொல்லப்பட வேண்டும் என்பதற்காக அவரது பாதுகாப்பு அகற்றப்பட்டது” என்றும் தன்னிடம் கூறியதாக சோனியா நினைவுகூர்ந்தார். ராகுல் கூறியது போல ராஜீவ் காந்தியின் பாதுகாப்புக் குறைக்கப்பட்டது தற்செயலாக நடந்த ஒன்றல்ல, அது மிகத் தெளிவான திட்டமிட்ட செயல் என்றும் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

இது குறித்து ராகுல் காந்தி வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், தாயாருடன் அமர்ந்து அந்த நினைவுகளைத் திரும்பிப் பார்த்தபோது மகிழ்ச்சி, சிரிப்பு மற்றும் வலி மீண்டும் வந்ததாகவும், அம்மாவின் பயணம் அளவற்ற அன்பும் கொடிய துயரமும் நிறைந்ததாக இருந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், “இந்தப் புத்தகத்தில் எனது தாய் சில விவரங்களை விட்டுவிட்டார்; எனது தந்தையின் பாதுகாப்பைத் திரும்பப் பெற்றதற்குப் பின்னால் ஒரு உள்நோக்கம் இருந்தது” எனவும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

1989 பொதுத் தேர்தலில் காங்கிரஸ் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, பிரதமர் வி.பி. சிங் தலைமையிலான அரசு 1990-ஆம் ஆண்டில் ராஜீவ் காந்தியின் எஸ்.பி.ஜி. (SPG) பாதுகாப்பைத் திரும்பப் பெற்றது. அதனைத் தொடர்ந்து 1991-ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் ராஜீவ் காந்தி கொல்லப்பட்டார்.

வீர் சாவர்க்கர் கொள்ளுப் பேரன் நோட்டீஸ்:

இதனிடையே, சுதந்திரப் போராட்ட வீரர் வீர் சாவர்க்கரின் கொள்ளுப் பேரன் சத்யகி சாவர்க்கர், சோனியா காந்திக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில், சோனியா எழுதியுள்ள புத்தகத்தின் 201-வது பக்கத்தில், “காங்கிரஸ் சுதந்திரப் போராட்ட வீரர்கள் ஆங்கிலேய ஆட்சியாளர்களின் தாக்குதல்களையும் சிறைவாசத்தையும் எதிர்கொண்டபோது, ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மூத்த சித்தாந்தவாதிகளான சாவர்க்கர் போன்றோர் தங்களது காலனிய ஆட்சியாளர்களிடம் கருணை மனுக்களை எழுதிக் கொண்டிருந்தனர்; மேலும், அந்த அமைப்பின் உறுப்பினர்கள் ஆங்கிலேய அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிப்பவர்களாகச் செயல்பட்டனர்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது சாவர்க்கரின் வாழ்க்கை மற்றும் அரசியல் போராட்டம் குறித்த முழுமையற்ற, திரிக்கப்பட்ட சித்திரத்தை அளிப்பதாகவும், புத்தகத்தின் 201 மற்றும் 443-வது பக்கங்களில் இடம்பெற்றுள்ள கருத்துகள் எதிர்மறையான எண்ணத்தை ஏற்படுத்தும் என்றும் நோட்டீஸில் கூறப்பட்டுள்ளது. எனவே, தனது கருத்துகளுக்கு நம்பகமான வரலாற்று ஆதாரங்களை சோனியா காந்தி சமர்ப்பிக்க வேண்டும் அல்லது மன்னிப்பு கேட்க வேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.