புரட்டாசி மாத சனிக்கிழமைகளை முன்னிட்டு நவதிருப்பதி திருத்தலங்களுக்குச் சென்று வர திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் எனத் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத் திருநெல்வேலி மண்டல நிர்வாக இயக்குநர் தெரிவித்துள்ளார்.
புரட்டாசி சனிக்கிழமைகளை முன்னிட்டு செப்டம்பர் 19.09.2026 மற்றும் 26.09.2026, அக்டோபர் 03.10.2026, 10.10.2026 மற்றும் 17.10.2026 ஆகிய நாட்களில் இச்சிறப்புப் பேருந்துகள் காலை 6.30 மணிக்குப் புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இச்சிறப்புச் சுற்றுலாவின் மூலம் பக்தர்கள் ஒரே நாளில் ஸ்ரீவைகுண்டம், நத்தம், திருப்புளியங்குடி, இரட்டைத் திருப்பதி, பெருங்குளம், தென்திருப்பேரை, திருக்கோளூர் மற்றும் ஆழ்வார்திருநகரி ஆகிய நவதிருப்பதி தலங்களுக்கும் சென்று வர வழிவகை செய்யப்பட்டுள்ளது.
நவதிருப்பதி சுற்றுலா சென்று வர ஒரு நபருக்குப் பயணக் கட்டணமாக ரூ.500/- மட்டுமே நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இச்சிறப்புப் பேருந்துகளுக்கான இருக்கைகளை அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.tnstc.in வாயிலாக முன்பதிவு செய்துகொள்ளலாம்.
பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் இயக்கப்படும் இந்த நவதிருப்பதி சிறப்புப் பேருந்து வசதியைப் பயன்படுத்திப் பயணிக்கலாம் எனத் திருநெல்வேலி மண்டல நிர்வாக இயக்குநர் செல்வம் தெரிவித்துள்ளார்.

