தமிழ்நாட்டில் புதிய வீட்டு உபயோக சமையல் எரிவாயு (Domestic LPG) இணைப்புகள் வழங்கப்படுவதில் நீண்டகாலமாக நிலவுவதாகக் கூறப்படும் தடைகளுக்கு உடனடியாகத் தீர்வு காண வேண்டும் என்றும், தகுதியுள்ள அனைத்து குடும்பங்களுக்கும் புதிய இணைப்புகளை வழங்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எம்பவர் இந்தியா வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து எம்பவர் இந்தியா நுகர்வோர் அமைப்பினர் சார்பில் ஆ.சங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: சமையல் எரிவாயு என்பது ஒவ்வொரு குடும்பத்தின் அத்தியாவசியத் தேவையாகும். ஆனால், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் புதிய வீட்டு LPG இணைப்புகளைப் பெறுவதில் பொதுமக்கள் சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக தெரிய வருகிறது .

புதிய இணைப்பு கிடைக்காததால், புதிதாகத் திருமணமானவர்கள், தனிக் குடும்பமாக வாழத் தொடங்கியவர்கள், புதிய வீடுகளில் குடியேறியவர்கள் மற்றும் ஏழை, எளிய, நடுத்தரக் குடும்பங்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். மாற்று எரிபொருட்களைப் பயன்படுத்துவதால் குடும்பச் செலவுகள் அதிகரிப்பதுடன், விறகு போன்ற எரிபொருட்களிலிருந்து வெளிப்படும் புகையால் உடல்நலப் பாதிப்புகள் ஏற்படும் அபாயமும் உள்ளது.

புதிய LPG இணைப்புகள் வழங்கப்படுவதை எண்ணெய் நிறுவனங்கள் நிறுத்தி வைத்துள்ளனவா, அவ்வாறு இருந்தால் அதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவு என்ன, எந்தக் காலவரையறைக்குள் புதிய இணைப்புகள் மீண்டும் வழங்கப்படும் என்பன குறித்து மத்திய அரசும் சம்பந்தப்பட்ட எண்ணெய் நிறுவனங்களும் தெளிவான தகவலை பொதுமக்களுக்கு அளிக்க வேண்டும்.

கடந்த ஓராண்டில் பெறப்பட்ட புதிய இணைப்பு விண்ணப்பங்கள், வழங்கப்பட்ட இணைப்புகள், நிலுவையில் உள்ள விண்ணப்பங்கள் மற்றும் நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்கள் குறித்த விவரங்களை வெளியிட வேண்டும்.

தகுதியுள்ள நுகர்வோரின் விண்ணப்பங்களை ஏற்றுக்கொண்டு, காலவரையறைக்குள் இணைப்புகளை வழங்க வேண்டும். மேலும், நீண்டகாலமாக நிலுவையில் உள்ள விண்ணப்பங்களுக்கு முன்னுரிமை அளித்து விரைந்து தீர்வு காண வேண்டும்.

ஏழை மற்றும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு, நடைமுறையில் உள்ள தகுதி விதிமுறைகளுக்கு உட்பட்டு, பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் இணைப்புகள் வழங்கப்பட வேண்டும்.

புதிய இணைப்புகள் பெறுவதில் சிரமம் உள்ள பகுதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தி, விண்ணப்பங்களைப் பெறுவதற்கும், ஆவணங்களைச் சரிபார்ப்பதற்கும், நிலுவை விண்ணப்பங்களைத் தீர்வு செய்வதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் புதிய எரிவாயு இணைப்பு வழங்காமை குறித்து தீர்வு காண வலியுறுத்தி, மத்திய அரசின் நுகர்வோர் விவகாரங்கள் துறை, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம், சம்பந்தப்பட்ட எண்ணெய் நிறுவனங்கள் மற்றும் தமிழ்நாடு அரசின் அதிகாரிகளுக்கு எம்பவர் இந்தியா நுகர்வோர் அமைப்பு சார்பில் கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது.