பத்திரிகையாளர்களுக்கான அடையாள அட்டை, அங்கீகார அட்டை மற்றும் பேருந்து பயண அட்டை வழங்குவதில் தமிழக அரசு பாரபட்சம் காட்டுவதாகத் தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் டி.எஸ்.ஆர். சுபாஷ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பத்திரிக்கையாளர்களுக்கான அடையாள அட்டை வழங்குவதில் தமிழக அரசு பாரபட்சம் காட்டுவதாக, தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் மாநில தலைவரும், அகில இந்திய பத்திரிகையாளர் சங்கத்தின் பொதுச்செயலாளருமான டி.எஸ்.ஆர். சுபாஷ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசின் சார்பில் பத்திரிக்கை மற்றும் ஊடகங்களுக்கு அந்தந்த மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் மூலம் அடையாள அட்டைகள், அங்கீகார அட்டைகள், மற்றும் பேருந்து பயண அட்டை வழங்கப்படுகின்றன.
இந்த நிலையில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு புதிய அரசு பொறுப்பேற்றதில் இருந்து செய்தி மக்கள் தொடர்புத்துறையில் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன. ஆர்என்ஐ பதிவு பெற்ற பத்திரிக்கைகளுக்கு எக்காரணம் கொண்டும் அடையாள அட்டைகள், அங்கீகார அட்டைகள், மற்றும் பேருந்து பயண அட்டை வழங்குவதை நிறுத்தக்கூடாது.
மேற்படி பத்திரிக்கையாளர்கள் நலன் சார்ந்த பிரச்சனைகளுக்கு அரசு உடனடி நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களின் முன்பு முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பத்திரிகையாளர்களுக்கு அடையாள அட்டை வழங்குவதில் நிலவும் பாரபட்சத்தை நீக்கி, அனைவருக்கும் நியாயமாக அட்டை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.

