இங்கிலாந்துக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் பாகிஸ்தான் அணி படுதோல்வி அடைந்ததை அடுத்து, அணியில் இடம்பெற்றிருந்த 7 வீரர்கள் மற்றும் 2 பயிற்சியாளர்களைப் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பாதியிலேயே நீக்கியுள்ளது கிரிக்கெட் உலகில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.
மூத்த வீரர்களான முகமது ரிஸ்வான், இமாம் உல் ஹக், சல்மான் அலி ஆகா ஆகியோர் உடனடியாக நாடு திரும்புமாறு உத்தரவிடப்பட்டுள்ளனர். இவர்கள் மோசமான ஃபார்ம் காரணமாக நீக்கப்பட்டதாகக் கருதப்பட்ட நிலையில், வீரர்களின் ஒழுங்கீனமான நடத்தையே இந்த அதிரடி முடிவுக்கு முக்கியக் காரணம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
முகமது ரிஸ்வான் 4 இன்னிங்ஸ்களில் 61 ரன்கள் மட்டுமே எடுத்துப் பொறுப்பற்ற முறையில் ஆட்டமிழந்தார். இமாம் உல் ஹக் தசைப்பிடிப்பு என்ற பெயரில் லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் விளையாடாமல் தவிர்த்ததால், அவரது அர்ப்பணிப்பு உணர்வு கேள்விக்குள்ளாகியுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இங்கிலாந்து சுற்றுப்பயணங்களின் போது நிகழ்ந்த அத்துமீறல்கள் குறித்து இந்த 3 வீரர்களும் விசாரணைக் குழு முன் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இவர்கள் மூவரும் செய்த தவறுகள் குறித்த விவரங்கள் முழுமையாக வெளியாகவில்லை என்றாலும், முகமது ரிஸ்வான் மற்றும் இமாம் உல் ஹக் ஆகியோர் இனி பாகிஸ்தான் அணியில் இடம்பெற வாய்ப்பில்லை என்றும், நீண்டகாலமாகச் சரியாக விளையாடாததால் அவர்களுக்கு இனி வாய்ப்பளிக்கப்படாது என்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தொடர் தோல்விகளைத் தொடர்ந்து பாகிஸ்தான் டெஸ்ட் அணியின் பயிற்சியாளர் சர்பராஸ் நீக்கப்பட்டு, மைக் ஹெசன் இடைக்கால டெஸ்ட் அணிப் பயிற்சியாளராகப் பொறுப்பேற்றுள்ளார். எட்ஜ்பாஸ்டனில் நடைபெறும் 3-வது டெஸ்ட் போட்டியை இவர் மேற்பார்வையிடுவார். இவர் நிரந்தரப் பயிற்சியாளராகப் பொறுப்பேற்க ஒப்புக்கொள்ளாத பட்சத்தில், வரும் நவம்பரில் நடைபெறவுள்ள இலங்கை தொடருக்கு முன்பாகப் புதிய பயிற்சியாளர் நியமிக்கப்படுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

