குமரி மாவட்டம்,குலசேகரம் ஜி.ஹெச். ரோடு பகுதியைச் சேர்ந்தவர் சுமையா பானு. இவருக்கும் இனியம் உடைவிளை பகுதியைச் சேர்ந்த செய்யது முகம்மது மாஹின் என்பவருக்கும் கடந்த 2001-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 4 குழந்தைகள் உள்ளனர். திருமணத்திற்குப் பிறகு, சுமையா பானுவின் உறவினர்களைச் சந்திக்கச் செய்யது முகம்மது மாஹின் அனுமதிக்கவில்லை எனக்கூறப்படுகிறது.

மேலும், மனைவிக்கு மனநோய் இருப்பதாகக் கூறி தினசரி மாத்திரைகளைக் கொடுத்து, அவரை வீட்டின் அறைக்குள் பூட்டி வைத்தும், குழந்தைகளைப் பார்க்க விடாமலும் கொடுமைப்படுத்தி வந்துள்ளார். கடந்த 2013-ஆம் ஆண்டு செப்டம்பர் 12-ஆம் தேதி, சுமையா பானுவின் தந்தை பீர்முகம்மது தனது மகளைப் பார்ப்பதற்காக வீட்டிற்கு வந்துள்ளார். தந்தையைக் கண்டதும் சுமையா பானு அலறி அழைத்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த செய்யது முகம்மது மாஹின், மனைவியைப் பைத்தியம் என்று கூறி சுவரில் தலையை மோதியதுடன், வயிற்றில் மிதித்துக் கொடுமைப்படுத்தியுள்ளார். மேலும் சூடேற்றப்பட்ட இரும்பு கம்பியால் சுமையா பானுவின் இடது மணிக்கட்டில் சூடு வைத்துள்ளார்.

சுமையா பானுவின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த தந்தை மற்றும் அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு, குலசேகரம் அரசு மருத்துவமனையிலும், பின்னர் மேல்சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் சேர்த்தனர். இச்சம்பவம் குறித்துச் சுமையா பானு அளித்த புகாரின் பேரில் குலசேகரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து செய்யது முகம்மது மாஹினைக் கைது செய்தனர்.

இவ்வழக்கு முதன்முதலில் பத்மநாபபுரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்றபோது, கடந்த 2019-ல் செய்யது முகம்மது மாஹினை விடுதலை செய்து தீர்ப்பளிக்கப்பட்டது. இதனை எதிர்த்துச் சுமையா பானு மாவட்ட நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

தொடர்ந்து, பத்மநாபபுரம் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பரமசிவதாஸ், குற்றம் சாட்டப்பட்ட செய்யது முகம்மது மாஹினுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.36,000 அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்தார்.