அம்பேத்கர் அயலகக் கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் மலேசியாவில் ஆராய்ச்சிப் படிப்பு படித்து வரும் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர் பாரதிதாசன், கடந்த ஏப்ரல் மாதம் முதல் தனக்கான அரசின் கல்வி உதவித்தொகை கிடைக்கவில்லை எனக் கூறி அண்மையில் கண்ணீருடன் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

இதற்குச் சமூக நீதித் துறை விளக்கம் அளித்துத் தவறு மாணவர் மீதுதான் எனக் குற்றம்சாட்டிய நிலையில், மாணவர் பாரதிதாசன் மீண்டும் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், "தமிழ்நாடு அரசு சார்பில் ஜூன் 8-ஆம் தேதி வரை வழங்கப்பட்ட ரூ.36 லட்சத்திற்கு இணையான ரூ.37 லட்சத்திற்கான ரசீதுகள் மற்றும் பல்கலைக்கழகத்தின் விளக்கங்கள் அனைத்தையும் ஏற்கனவே சமர்ப்பித்துவிட்டேன். ஆகஸ்ட் 26-ஆம் தேதிக்கான ரசீதையும் அனுப்பிவிட்டேன்.

ஆனால், சமூக நீதித் துறை மீண்டும் மீண்டும் ரசீது சமர்ப்பிக்கவில்லை என என் மீது தவறானத் தகவலைக் கட்டமைத்து வருகிறது. உதவித்தொகை கிடைக்காததால் எனது ஆராய்ச்சிக்கான செலவுகளைச் செய்ய முடியாமல் சிரமப்படுகிறேன். தயவுசெய்து எனது கல்விக் கனவைச் சிதைக்காதீர்கள்." எனக் வேதனையுடன் குறிப்பிட்டிருந்தார்.

கனிமொழி எம்பி கடும் கண்டனம்:

இவ்விவகாரம் தொடர்பாகத் திமுக எம்பி கனிமொழி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:"மாணவர் பாரதிதாசனுக்கு உறுதியளிக்கப்பட்ட கல்வி உதவித்தொகையை வழங்குவதற்கு இவ்வளவு கெடுபிடிகளைத் தவெக அரசு விதிப்பதற்கான தேவை என்ன?

கல்விக்காக இந்த 2026-லும், ஒரு மாணவர் கண்ணீர் சிந்த வேண்டிய நிலை ஏற்படுமானால், கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்ற நிலையை எட்ட நாம் மேற்கொண்ட போராட்டங்களின் நோக்கத்தையே இந்த அரசு சிதைத்துவிட்டது என்றுதான் பொருள்.

அரசு தனது பொறுப்பைத் தட்டிக்கழித்தாலும், ஒரு மாணவரின் கல்விக் கனவு அரசின் பிடிவாதத்திற்குப் பலியாவதை இனியும் அனுமதிக்க முடியாது. திமுகவும் தமிழ்நாட்டு மக்களும் பாரதிதாசனின் கல்விக்கு என்றும் உறுதுணையாக நிற்கும் என்று கழகத் தலைவர் அண்ணன் மு.க. ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்." என்றார்.