யூடியூப் சேனல்கள் மற்றும் நேர்காணல்களில் குறிப்பிட்ட மதம் குறித்து இழிவான மற்றும் ஆபாசமான கருத்துகளைப் பதிவிட்டதாக எழுந்த புகாரின் பேரில், சென்னையைச் சேர்ந்த யூடியூபரை தூத்துக்குடி மாவட்ட சைபர் குற்றப் பிரிவு போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம், தாளமுத்துநகரைச் சேர்ந்த நபர் ஒருவர் சைபர் கிரைம் காவல்துறையிடம் புகார் மனு ஒன்றை அளித்திருந்தார். அதில், சில யூடியூப் சேனல்களில் வெளியிடப்பட்ட வீடியோக்களில் குறிப்பிட்ட மதம் குறித்து மிகவும் இழிவாகவும், ஆபாசமாகவும் பேசி மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் கருத்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டிருந்தார்.

இப்புகாரின் அடிப்படையில் தூத்துக்குடி சைபர் குற்றப் பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், சென்னை அசோக் நகரைச் சேர்ந்த சங்கரன் என்பவரது மகன் கிருஷ்ணவேல் (56) என்பவரே யூடியூப் நேர்காணல்கள் மற்றும் வீடியோக்கள் வாயிலாக இத்தகைய அவதூறு கருத்துகளைப் பரப்பியது தெரியவந்தது.

இதையடுத்து, சென்னைக்குச் சென்ற தூத்துக்குடி சைபர் கிரைம் தனிப்படை போலீசார், அசோக் நகரில் இருந்த கிருஷ்ணவேலைக் கைது செய்தனர். பின்னர் அவரைத் தூத்துக்குடிக்கு அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்தனர்.