உள்நாட்டு மின்சார வாகன உற்பத்தி மற்றும் மறுசுழற்சி துறையைப் பாதுகாக்கும் வகையில், லித்தியம்-அயன் பேட்டரி 'பிளாக் மாஸ்' (Black Mass) கழிவுகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய மத்திய அரசு உடனடியாகத் தடை விதித்துள்ளது.

இந்தியாவில் மின்சார வாகன உற்பத்தி அசுர வேகத்தில் வளர்ந்து வரும் நிலையில், மறுசுழற்சி ஆலைகளுக்குத் தேவையான மூலப்பொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க வேண்டும் என்பதற்காக லித்தியம்-அயன் பேட்டரி மூலப்பொருட்கள் ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.

பயன்படுத்தப்பட்ட லித்தியம்-அயன் பேட்டரிகளை நொறுக்கும்போது கிடைக்கும் கறுப்பு நிற பவுடரான 'பிளாக் மாஸ்' கழிவுகளில் லித்தியம், நிக்கல், கோபால்ட் மற்றும் மாங்கனீஸ் போன்ற விலைமதிப்பற்ற கனிமங்கள் அடங்கியுள்ளன.

மத்திய வர்த்தக அமைச்சகத்தின் கீழ் செயல்படும் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், வகைப்படுத்தப்படாத இந்த பேட்டரி கழிவுகளின் ஏற்றுமதி கொள்கை 'இலவசம்' என்ற பிரிவில் இருந்து 'தடை செய்யப்பட்டது' என்ற பிரிவுக்கு மாற்றப்பட்டு உடனடியாக அமலுக்கு வந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் உள்நாட்டு மறுசுழற்சி ஆலைகளுக்குத் தேவையான மூலப்பொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைப்பதுடன், வெளிநாட்டு இறக்குமதியைச் சார்ந்திருப்பது கணிசமாகக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..