கழுகுமலை கழுகாசலமூர்த்தி குடைவரை கோயிலில் நடைபெற்ற திருக்கார்த்திகை திருவிழாவில் மலை உச்சியில் உள்ள கொப்பரையில் மகாதீபம் ஏற்றப்பட்டதுடன், திரளான பக்தர்கள் மலையைச் சுற்றி கிரிவலம் சென்று வழிபாடு நடத்தினர்.
தமிழகத்தின் தென் பழனி என அழைக்கப்படும் கழுகுமலை கழுகாசலமூர்த்தி குடைவரை கோயிலில் திருக்கார்த்திகை திருவிழாவை முன்னிட்டு, மலை உச்சியில் உள்ள பிள்ளையார் கோயில் முன்புள்ள கொப்பரையில் நேற்று (நவம்பர் 24) மாலை 6 மணியளவில் 10 லிட்டர் நெய், நல்லெண்ணெய் ஊற்றி மகாதீபம் ஏற்றப்பட்டது.
திருக்கார்த்திகை திருவிழாவை ஒட்டி நேற்று அதிகாலை 5 மணிக்குக் கோயில் நடை திறக்கப்பட்டு, காலை 6 மணிக்குத் திருவனந்தல் பூஜை, விளா பூஜை மற்றும் காலசந்தி பூஜைகள் நடைபெற்றன. காலை 7 மணிக்குக் கழுகாசலமூர்த்திக்குச் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனையும், மதியம் 12 மணிக்கு உச்சிக்கால பூஜையும் நடத்தப்பட்டன.
மாலை 6 மணியளவில் மலை உச்சியில் உள்ள பிள்ளையார் கோயில் முன்பு அமைந்துள்ள கொப்பரையில் 10 லிட்டர் நெய், நல்லெண்ணெய் ஊற்றி மகாதீபம் ஏற்றப்பட்டது. அப்போது மலை அடிவாரத்தில் திரண்டிருந்த ஏராளமான பக்தர்கள் கோஷம் எழுப்பி வழிபாடு நடத்தினர். கழுகுமலை சுற்றுவட்டாரத்தில் சுமார் 10 கி.மீ. தொலைவுக்குத் தெரியும் வகையில் ஏற்றப்பட்ட இந்த மகாதீபம், இன்று (நவம்பர் 25) காலை 7 மணி வரை எரிந்தது.
மாலை 6.10 மணியளவில் கிரிவலம் செல்வதற்காகக் கோயில் முன்பு குவிந்த பக்தர்களின் கிரிவலத்தைக் குழுத் தலைவர் மாரியப்பன் தொடங்கி வைத்தார். கோயில் முன்பிருந்து புறப்பட்ட பக்தர்கள் மலையைச் சுற்றி கிரிவலம் சென்றனர். இரவு 7 மணியளவில் கழுகாசலமூர்த்திக்குச் சிறப்பு வழிபாடு மற்றும் தீபாராதனை நடைபெற்றுப் பிரசாதம் வழங்கப்பட்டது; இதில் கோயில் நிர்வாக அதிகாரி கார்த்தீஸ்வரன் உள்ளிட்ட திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
இரவு 7.30 மணியளவில் கோயிலில் நாரணி தீபம் ஏற்றப்பட்டுச் சிறப்பு வழிபாடு நடைபெற்றதைத் தொடர்ந்து, சுவாமி வள்ளி, தெய்வானையுடன் மயில் வாகனத்தில் முக்கிய வீதிகளின் வழியாக வீதியுலா சென்று பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பின்னர் இரவு 10 மணியளவில் கோயில் மேலவாசல் பகுதியில் வைக்கப்பட்டிருந்த சுமார் 30 அடி உயரச் சொக்கப்பனை கொளுத்தப்பட்டுச் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. விழா ஏற்பாடுகளைக் கோயில் நிர்வாக அதிகாரி கார்த்தீஸ்வரன் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

செண்பகவல்லி அம்மன் உடனுறை ஸ்ரீ பூவனநாத சுவாமி கோயிலுடன் இணைந்த சொர்ணமலை கதிரேசன் கோயில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டுக் காலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டு, காலை 9 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, புண்யவாஜனம், கும்ப கலச பூஜை, சண்முகர் ஜெபம் ஆகியவை நடைபெற்றன.
தொடர்ந்து மூலவர் கதிர்வேல் முருகனுக்கும், வள்ளி, தெய்வானை சமேத கார்த்திகேயர் சுப்பிரமணியருக்கும் 21 வகையான மூலிகைகளால் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடத்தப்பட்டு, மாலையில் மகாதீபம் ஏற்றப்பட்டது. இந்நிகழ்வில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
செண்பகவல்லி அம்மன் கோயிலில் அதிகாலை 4.30 மணிக்குத் திருவனந்தல் மற்றும் திருப்பள்ளியெழுச்சி பூஜை நடைபெற்றது. சுவாமி, அம்பாள், விநாயகர், முருகன், லட்சுமி, சரஸ்வதி உள்ளிட்ட அனைத்துச் சந்நிதிகளிலும் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை மற்றும் பரணி தீபம் ஏற்றப்பட்டன. முன்னதாகக் கௌரி அம்பாள் சமேத சந்திரசேகர் சுவாமி புறப்பாடு நடைபெற்று, இரவு 7 மணிக்கு மேல் கோயில் முன்பு சொக்கப்பனை ஏற்றப்பட்டது.

