தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள குருமலை தாழையூத்தில் பொய்யாழி அய்யனார் கோவில் அருகில் அமைந்துள்ள முனியசுவாமி கோவிலில் புரட்டாசி அமாவாசையை முன்னிட்டு நடைபெற்ற வழிபாட்டின்போது கடந்தை குளவிகள் கொட்டியதில் சுமார் 100 பேர் காயமடைந்துள்ளனர்.
முடுக்கலாங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஒவ்வொரு வருடமும் புரட்டாசி அமாவாசையை ஒட்டி வரும் சனிக்கிழமையில் இக்கோவிலுக்குச் சென்று வழிபடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அதன்படி, முடுக்கலாங்குளம் கிராமத்தைச் சேர்ந்த ஆண்கள் நேற்று முனியசுவாமி கோவிலுக்குச் சென்று மழை வேண்டி சிறப்புப் பூஜைகளைச் செய்தனர்.
இதனைத் தொடர்ந்து அங்கு அன்னதானம் வழங்கத் தொடங்க முயன்றபோது, அப்பகுதியில் திடீரெனக் கூட்டமாக வந்த கடந்தை (கதண்டு) குளவிகள் அங்கிருந்தவர்களைக் கொட்டத் தொடங்கின. திடீர் கடந்தை குளவி தாக்குதலால் அலறி அடித்து ஓடியவர்களில் சுமார் 100-க்கும் மேற்பட்டோருக்குக் காயம் ஏற்பட்டது.
உடனடியாக அவர்கள் மீட்கப்பட்டுச் சிகிச்சைக்காகக் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இவர்களில் சுமார் 25-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டுத் தீவிரச் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

