கர்நாடக மாநிலம் பெலகாவி பகுதியில் வீடொன்றில் நள்ளிரவில் திடீரென பிரிட்ஜ் வெடித்து பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த கொடூர சம்பவத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
உயிரிழந்தவர்கள் கஜானன் தாமோன் (65), ரோஷன் தாமோன் (21), சாரதா தாமோன் (45) மற்றும் பாரதி தாமோன் (50) என அடையாளம் காணப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த விபத்தில் பலத்த காயமடைந்த ப்ரியா (28) மற்றும் கங்கா (25) ஆகிய இருவர் மீட்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குடும்பத்தினர் அனைவரும் இரவு உறங்கிக் கொண்டிருந்த நேரத்தில் இத்துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மின் கசிவு காரணமாக பிரிட்ஜில் திடீரென அதிகப்படியான மின்னழுத்தம் பாய்ந்ததே இந்த வெடிவிபத்துக்கு காரணம் என போலீசார் முதற்கட்ட விசாரணையில் சந்தேகிக்கின்றனர். இதுபோன்ற ஆபத்துகளைத் தவிர்க்க வீடுகளில் உள்ள மின்சாதனப் பொருட்களை அவ்வப்போது முறையாகப் பராமரிக்க வேண்டும் என வல்லுநர்கள் அறிவுறுத்துகின்றனர்.

